3726.பெய் கலன்களின் இலங்கு
     ஒளி மருங்கொடு பிறழ,
வைகலும் புனல் குடைபவர்
     வான் அரமகளிர்;
செய்கை அன்னங்கள் ஏந்திய
     சேடியர் என்னப்
பொய்கை அன்னங்கள் ஏந்திய பூங்
     கொம்பர் பொலிவ.

     பெய்கலன்களின் இலங்கு ஒளி - தான் அணிந்திருந்த
அணிகலன்களின் விளங்குகின்ற ஒளியானது; மருங்கொடு பிறழ -
எல்லாப்பக்கங்களிலும் ஒளி வீச; வைகலும் புனல்குடைபவர் - நாள்தொறும்
புனலில் துளைந்து நீராடுபவாகளாகிய; வாள் அர மகளிர் - தேவ மகளிரின்;
செய்கை அன்னங்கள் -
 (விளையாடுவதற்காகச்) செய்யப்பட்ட செய்கை
அன்னங்களை; ஏந்திய சேடியர் என்ன - கைகளில் ஏந்தி நிற்கும் தோழியர்
போல; பொய்கை அன்னங்கள் - பொய்கையிலுள்ள அன்னங்களை; ஏந்திய
பூங்கொம்பர் -
ஏந்தி நிற்கின்ற மலர்க்கொம்புகள்; பொலிவ - விளங்கின.

     தேவமகளிர் புனலில் குடைந்து ஆடியதால் அஞ்சி பொய்கை
அன்னங்கள் அஞ்சி எழுந்து அருகில் உள்ள மலர்க்கொம்புகளில் தங்கின.
அதனால் செயற்கை அன்னங்களைக் கையில் ஏந்திய தேவமகளிரின்
தோழியர்போல மலர்க்கொம்புகள் காட்சி அளித்தன.  பொய்கை
அன்னத்திற்குச் செய்கை அன்னமும் கரையிலுள்ள மலர்க்கொம்புகளுக்கு
தோழியரும் ஒப்பு.  இஃது உவமை அணியாம்.

     பெய்தல் -அணிதல்; கலன்கள் - அணிகலன்; செய்கை அன்னம் -
செயற்கை அன்னம் - விளையாடுதற்குரிய பதுமை; வானரமகளிர் நாள்தொறும்
வந்து நீராடுவர் என்றதனால் பம்பையின் பெருமைபுனலாம்.            18