சீதையின் நினைவால் இராமன் புலம்பல் 3730. | அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகி, கன்னி அன்னமும் கமலமும் முதலிய கண்டான்; தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான், உன்னும் நல் உணர்வு ஒடுங்கிட, புலம்புதலுற்றான்: |
அன்னது ஆகிய - அத்தன்மையுடையதான; அகன்புனல் பொய்கையை - மிக்க நீரைஉடைய பொய்கையை; அணுகி - நெருங்கி; கன்னி அன்னமும் - இளமையான அன்னங்கள்; கமலமும் முதலிய- தாமரை மலர்கள் முதலானவற்றையும்; கண்டான் - (இராமன்) கண்டு; தன்னின் நீங்கிய - தன்னைப் பிரிந்து சென்ற; தளிர் இயற்கு - இளந்தளிர் போன்ற மென்மையை உடைய சீதை பொருட்டு; உருகினன் தளர்வான் - மனம் உருகி வருந்துபவனாய்; உன்னும் நல் உணர்வு- ஆராய்ந்தறிதற்கு உரிய நல்லறிவு; ஒடுங்கிட - ஒடுங்கிவிட; புலம்புதல் உற்றான் - புலம்பத் தொடங்கினான். அன்னமும் கமலமும் சீதையின் நடையழைகையும், முகப்பொலிவினையும் நினைவுபடுத்தியதால் இராமன் புலம்பத் தொடங்கினான். அன்னமும் கமலமும் கொண்டு நடை, முகம் கூறிய கவிஞர் அவளது பிற உறுப்புக்களை நினைவுபடுத்தும் குவளை, கொடி முதலியவற்றை 'முதலிய' என்றதால் பெறவைத்தார். இராமபிரான் திருமாலின் அவதாரமாக இருந்தும் மானிடப் பிறவியை ஏற்றதால் இவ்வாறு புலம்பலானான் என்க. தளிரியல் - உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; முதலிய - பலவின்பால் பெயர். 22 |