3739. | 'பஞ்சு பூத்த விரல், பதுமம் பவளம் பூத்த அடியாள், என் நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள், நிறம் பூத்த மஞ்சு பூத்த மழைய அனைய குழலாள், கண்போல் மணிக் குவளாய்! நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ?' |
பஞ்சு பூத்த விரல்- செம்பஞ்சுக்குழம்பு ஊட்டிய விரல்களால்; பதுமம் பவளம் பூத்த- செந்தாமரை மலரில் பவளம் பொருந்தியது போன்ற; அடியாள் - அடிகளை உடையவளும்; என் நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம்- என் மனமென்னும் மலர்ந்த தாமரை மலராகிய நிலையத்தில்; பூத்தாள் - (எப்பொழுதும்)விளங்குபவளும்; நிறம் பூத்த - கருநிறத்தால் சிறந்து விளங்கும்; மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் - அழகுமிக்க மேகம் போன்ற கூந்தலை உடையவளுமான சீதையின்; கண்போல் - கண்களைப்போன்று விளங்கும்; மணிக்குவளாய் - அழகிய குவளை மலரே! நஞ்சு பூத்ததாம் அன்ன - நஞ்சு படர்ந்தது போல; நகையால் - (நின்) சிரிப்பால்; என்னை நலிவாயோ - என்னை வருத்துவாயோ? எப்போதும் என் மனத்தாமரையில் தங்கியிருக்கும் சீதையின் கண்களை நீ ஒத்திருத்தலால், அவள் என்னிடம் அன்புகாட்டுதல் போல் நீயும் அன்புகாட்ட வேண்டியதிருக்க, என் துன்பங்கண்டு பரிகசித்து மகிழ்தல் தக்கதன்று என்பதாம். திருமகள் தங்குமிடம் தாமரை ஆதலாலும், இராமன் மனத்தில் அவள் என்றும் இருப்பதாலும் 'என் நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம்' என்றார். சீதையின் திருவடிகள் தாமரை மலராகவும், செம்பஞ்சூட்டிய விரல்கள் தாமரையில் பூத்த பவளமாகவும் கொள்ளத்தகும். ''பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தைப் பஞ்சியூட்டி ''மேற்பட மதியஞ் சூட்டி விரகுற நிரைத்த - மெய்ய - காற்றகை விரல்கள், (4479)' பஞ்சியூட்டிய பரட்டிசை கிண்கிணிப்பதுமச் செஞ்செவிச் செழும் பவளத்தின் கொழுஞ்சுடல் (4838) என்பனவும் காணத்தகுவன. 'பூத்த' என்ற சொல் பலமுறை பயின்றமையால் சொற்பின்வருநிலை அணியாகும். 'நகுதல்' என்பது இங்கு மலர்தல். (பரிகாசமாகச்) சிரித்தல் எனும் ஒரு பொருளையும் தந்தது. மலரின் இயல்பான மலர்ச்சியைப் பரிகாசச் சிரிப்பாகக் கொண்டது தற்குறிப்பேற்ற அணியாகும். நஞ்சு வருத்துவதாலும் கருநிறத்தாலும் குவளைக்கு உவமை. 'நஞ்சினும் கொடிய நாட்டம்' (896) என்றது காண்க. சீதை கூந்தலுக்கு மழை உவமையாதல் 'மழையேந்திய குழலாள்' (1931) என்ற அடியும் உணர்த்தும். 31 |