3744.நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும்,
தீத்த காமத் தெறு கதிர்த் தீயினால்,
காய்த்து இரும்பை, கருமகக் கம்மியன்,
தோய்த்த தண் புனல் ஒத்தது, அத் தோயமே.

     நெடியவன் - இராமன்; நீத்தம் நீரில்- பொய்கையின் வெள்ள நீரில்;
மூழ்கலும்
- முழுகின அளவில்; தீத்த - (அவன் திருமேனியை) வெதுப்பிய;
காமத் தெறுகதிர்த்தீயினால் -
காமமாகிய அழிக்கின்ற சுடர்விட்டு எரியும்
நெருப்பினால்; அத்தோயம் - அப்பொய்கை நீர்; கருமகக்கம்மியன் -
இரும்பு வேலை செய்பவனாகிய கருமான்; காய்த்து இரும்பை- இரும்பைக்
காய்ச்சி; தோய்த்த - தோய்த்ததான; தண்புனல் ஒத்தது- குளிர்ந்த நீரை
ஒத்தது.

     சீதையைப் பிரிந்து வருந்தும் இராமபிரான் நீராடிய மாத்திரத்தில் அவன்
மேனியின் வெப்பத்தால் அத்தண்ணீர் கொல்லன் உலையில் காய்ச்சிய
இரும்பைத் தோய்த்த நீர்போலக் கொதித்தது என்பதாம்; உவமையணி.
காமமும் கனலும் தாம் சேர்ந்த இடத்தைச் சுட்டெரிக்கும் தன்மையன
ஆதலால் 'தீத்த காமத்தெறுகதிர்த்தீ' என்றார்; உருவக அணி.  உலகத்து நீர்
நெருப்பை அவிக்க, இக்காமத்தீ அந்நீரையும் கொதிக்கச் செய்யும்
இயல்புடையதென வேற்றுமைப்பட வருதலின் வேற்றுமை அணியாகும்.

     கருமகக்கம்மியன் - கருமக(கருமா)னாகிய கம்மியன்;இரு பெயரொட்டு.
நீத்தம் - வெள்ளம்; நீந்தப்படுவது என்னும் பொருளது.               36