3747. | பூஒடுங்கின; விரவு புள் ஒடுங்கின, பொழில்கள்; மா ஒடுங்கின; மரனும் இலை ஒடுங்கின; கிளிகள் நா ஒடுங்கின; மயில்கள் நடம் ஒடுங்கின; குயில்கள் கூ ஒடுங்கின; பிளிறு குரல் ஒடுங்கின, களிறு. |
பூ ஒடுங்கின - (இரவு வருதலும்) மலர்கள் குவிந்தன; பொழில்கள் - சோலைகளில்; விரவுபுள் ஒடுங்கின - வந்து கலந்த பறவைகள் தத்தம் இடங்களில் போய் அடங்கின; மா ஒடுங்கின - விலங்குகள் தம் செயல் அடங்கின; மரனும் இலை ஒடுங்கின - மரங்களும் இலைகள் குவியப் பெற்றன; கிளிகள் நா ஒடுங்கின-கிளிகள் பேசுதல் இன்றி அடங்கின; மயில்கள் நா ஒடுங்கின - மயில்கள் ஆடுதல் ஒழிந்தன; குயில்கள் கூ ஓடுங்கின- குயில்கள் இனிமையாகக் கூவுதலை நிறுத்தின; களிறு பிளிறு குரல் ஒடுங்கின- யானைகள் பிளிறுதலாகிய பேரொலி அடங்கின. ஒடுங்குதல் - உறக்கம் கொண்டு ஒடுங்குதல்; ஒடுங்குதல் என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை வந்ததால் சொற்பொருள் பின்வரு நிலையணியாகும். மரனும் என்றஇழிவு சிறப்பும்மை அதன் ஓரறிவுடைமையைக் குறித்தது. கூ - முதனிலைத் தொழிற்பெயர்; பிளிறு குரல் - வினைத்தொகை; இப்பாடல் சுந்தரகாண்டம் 158 ஆம்பாடலை ஒத்திருத்தல் காண்க.(4992) 39 |