சீதையைத் தேடி, மேலும் நடத்தல் 3749. | பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும், புகையினொடு பங்கம் உற்றனைய வினை பரிவுறும்படி, முடிவு இல் கங்குல் இற்றது; கமலம் முகம் எடுத்தன; - கடலின் வெங் கதிர்க் கடவுள் எழ, விமலன் வெந் துயரின் எழ. |
விமலன் - குற்றமற்றவனாகிய இராமபிரான்; வெந்துயரின் எழ - கொடிய துன்பத்தினின்று நீங்கும்படி; கடலின் வெங்கதிர்க்கடவுள் - கடலில் வெய்யகதிர்களை உடைய கதிரவன்; எழ - உதிக்க; பொங்கி முற்றிய உணர்வு - நிரம்பி முதிர்ந்த மெய்யறிவு; புணர்தலும் - வந்து சேர்கையில்; புகையினொடு- புகையுடன்; பங்கம் உற்று அனைய வினை - சேறும் சேர்ந்தாற்போன்ற தீவினைகள்; பரிவுறும்படி - துன்பமடைந்து நீங்குவது போல; முடிவுஇல்- முடிவில்லாத; கங்குல் இற்றது- இரவு கழிந்தது; கமலம் - தாமரை மலர்கள்; முகம் எடுத்தன- மலர்ந்தன. கதிரவன் தோன்றிய அளவில் இருள் நீங்குதலுக்கு மெய்யுணர்வு வந்து சேர்ந்த நிலையில் வினைகள் அழிந்தொழிதல் உவமம்; உவமை அணி. இரவுக் காலத்தில் மிக்கிருந்த துன்பம் பகற்காலத்தில் குறைவுபடுவதாலும், இராமன் அன்றையநாள் சுக்கிரீவன் நட்பைப் பெற இருப்பதாலும் 'விமலன் வெந்துயரின் எழ' என்றார். புகையும் சேறும் கலந்தாற்போன்ற வினை என்றது - பாவத்தைக் கருநிறமுடையதாகக் காட்டும் மரபை நோக்கும். புகை மேலிருப்பது, சேறு அடியிலிருப்பது. எனவே மேலும் கீழும் குற்றம் பொருந்திய தீவினைக்கு உவமையாயிற்று. பிரிந்திருப்பார்க்கு இரவு நீட்டித்ததாகத் தோன்றுமாதலின் 'முடிவில் கங்குல்' எனப்பட்டது. இராமனின் துயர் இனி நீங்குமாதலின் தாமரை தலை நிமிர்ந்து மலர்ந்தது எனலாம். விமலன் வெந்துயராவது - பிராட்டியைப் பிரிந்தமையால் உண்டான துன்பமாகும். 41 |