3777. | 'புயல் தரு மதத் திண் கோட்டுப் புகர் மலைக்கு இறையை ஊர்ந்து, மயல் தரும் அவுணர் யாரும் மடிதர, வரி வில் கொண்ட, இயல் தரும் புலமைச் செங்கோல் மனு முதல் யாரும் ஒவ்வாத் தயரதன்; கனக மாடத் தட மதில் அயோத்தி வேந்தன்; * |
புயல் தரு மதம் - மேகம் போலப் பொழியும் மதத்தையும்; திண் கோடு - வலிமையான தந்தங்களையும்; புகர் - (முகத்தில்) புள்ளி களையும் உடைய; மலைக்கு இறையை ஊர்ந்து - மலைகள் போன்ற யானைகளுக்குத் தலைவனாகிய பட்டத்து அரச யானையை ஏறிச் செலுத்தி; மயல் தரும் அவுணர் யாரும்- மதி மயக்கம் கொண்ட அசுரர்கள் எல்லாம்; மடிதர - அழியும்படி; வரிவில் கொண்ட - கட்டமைந்த வில்லைக் கொண்டு போர் செய்த; இயல்தரும் புலமைச் செங்கோல் - இயல்பாகப் பொருந்திய அறிவினையும் செங்கோலையும் உடைய; மனு முதல் யாரும் ஒவ்வா- மனு முதலான எந்த அரசர்களும் நிகர் ஆகமாட்டாத; தயரதன் - தயரதன் என்பான்; கனக மாடம் - பொன் மயமான மாளிகைகளையும்; தட மதில் - பெரிய மதிலையும் உடைய; அயோத்தி வேந்தன் - அயோத்தி நகரத்திற்கு வேந்தனாவான். மதத்தின் மிகுதி புலப்பட 'புயல் தரு மதம்' என்றார். 'முதல்' என்றதனால் குறிக்கப்பட்டவர் மாந்தாதா, ககுஸ்தன், சகரன், பகீரதன் முதலியோர். ''வெஞ்சினத்து அவுணர் தேர் பத்தும் வென்றுளேற்கு (1631) எனத் தயரதன் கூறியது காண்க. புயல் தரு மதம் - தரு 'உவம உருபு. புகர்மலை - யானையைக் குறித்ததால் உவம ஆகுபெயர். 27 |