அனுமன், சுக்கிரீவனிடம் இராமன் சிறப்புகளைக் கூறுதல்

கலிவிருத்தம்

3786.போன, மந்தர மணிப் புய
    நேடும் புகழினான், -
ஆன தன் பொரு சினத்து
    அரசன் மாடு அணுகினான் -
'யானும், என் குலமும, இவ்
    உலகும், உய்ந்தனம்' எனா,
மானவன் குணம் எலாம்
    நினையும் மா மதியினான்.

     போன - (அவ்வாறு) சென்ற; மந்தர மணிப்புயம் - மந்தர மலை
போன்ற அழகிய தோள்களால விளைந்த; நெடும்புகழினான் - மிக்க
புகழையும் உடைய அனுமன்; மானவன் குணம் எலாம் - மனுக்குலத்துப்
பிறந்த இராமனுடைய குணங்கள் எல்லாவற்றையும்; நினையும் மாமதியினான்
-
(எப்போதும்) சிந்திக்கும் பேரறிவு உடையவனாய்; யானும், என் குலமும் -
'நானும், எனது குலத்தினரும்; இவ்வுலகும் உய்ந்தனம் - இந்த உலகும்
பிழைத்தோம்'; எனா - என்று சொல்லிக் கொண்டே; தன் ஆன - தன்
தலைவனாகிய; பொருசினத்து அரசன் மாடு - போர்செய்தற்குரிய
சீற்றத்தை உடைய மன்னன் சுக்கிரீவனிடம்;  அணுகினான் -
வந்தடைந்தான்.

     அனுமன் தான் சென்ற காரியம் செவ்வனே முடிந்தது என்பதைக்
குறிக்கும் வகையில் 'யானும் என் குலமும் இவ்வுலகும் உய்ந்தனம்' என்றான்.
தான் முதலில் சென்று இராமலக்குவரைக் கண்ட சிறப்பால் 'யானும்' என
முதலில் தன்னைத் தனியே கூறினான்.  வாலியை வென்று வானரக்
கூட்டத்தைப் பிழைக்கச் செய்வான் என்பதால் 'என் குலமும்' என்றும்
அரக்கர் அழிதல் உறுதி என்பது தோன்ற 'இவ்வுலகும் உய்ந்தனம்' என்றும்
கூறிச் சென்றான்.

     அன்பு, அருள், இன்சொல், நேர்மை, அழகு என இராமனிடம் அனுமன்
கண்ட குணங்கள் பலவாதலின் 'குணமெலாம்' என்றார்.  அவற்றையே
நினைத்துக் கொண்டமையால் 'நினைந்து' என்றும், நல்ல பண்புகளை மறவாது
நினைக்கும் நல்ல அறிவு உடையனாதலின் 'மாமதியினான்' என்றும் கூறினார்.
மனுவின் வழித் தோன்றல் இராமன் ஆதலின் 'மானவன்' எனக்குறித்தார்.
அனுமனின் தோளுக்கு மந்தரமலை உவமை ஆதலை 'தேவருக்கு அமுதல்
ஈந்த குன்றென . . . குவவுத்தோளான் (4934) என்ற அடியும் அவன்
'நெடும்புகழினான்' என்பதை 'ஊழிதோறும் புதிதுஉறுஞ் சீர்த்தியான்' (5168)
என்ற அடியும் உணர்த்தும்.  அனுமனை 'நல்லறிவாளன் எனப் பின்வரும்
கூறுவது காண்க. (4808).

     அரசன் மாடு - மாடு ஏழனுருபு இடப்பொருளில் வந்தது.          1