3790. | 'நீதியார்; கருணையின் நெறியினார்; நெறிவயின் பேதியா நிலைமையார்; எவரினும் பெருமையார்; போதியாது அளவு இலா உணர்வினார்; புகழினார்; காதி சேய் தரு நெடுங் கடவுள் வெம் படையினார். |
நீதியார் - (அவர்கள்) நீதியை மேற்கொண்டவர்கள்; கருணையின் நெறியினார் - அருள் நெறியில் ஒழுகுகின்றவர்கள்; நெறிவயின்- அந்த நீதி வழியினின்றும்; பேதியா நிலைமையார் - மாறுபடாத உறுதியை உடையவர்கள்; எவரினும் பெருமையார் - எல்லோரைக் காட்டிலும் மிக்க பெருமை உடையவர்கள்; போதியாது- எவராலும் கற்பிக்கப்படாமல்; அளவுஇலா உணர்வினர் - இயல்பாகவே அமைந்த அளவில்லாத அறிவினைப் பெற்றவர்கள்; புகழினார் - பெரும்புகழ் வாய்ந்தவர்கள்; காதி சேய் தரு - காதி என்பானின் மகனாகிய விசுவாமித்திரர் கொடுத்த; நெடுங்கடவுள் வெம்படையினார் - தெய்வத்தன்மை பொருந்திய கொடிய படைக்கலங்களைப் பெற்றவர்கள். சுக்கிரீவனுக்கு நீதி வழங்கலே முதலில் வேண்டியது ஆதலின் அதைத்தரவல்லாரை 'நீதியார்' என முதலில் குறிப்பிட்டான். ''ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர் வேர் அறுப்பென், வெருவன்மின் நீர்' என (2652) இராமன் முனிவர்களிடம் கூறியது நோக்குக. வாலியின் வலிமை அறிந்தபின்னர் மாறிவிடுவரோ என்ற ஐயத்தைப் போக்கும் வகையில் 'நெறிவயின் பேதியா நிலைமையார்' என்றான். எவரினும் வலிமை படைத்த வாலியை வெல்லும் ஆற்றல் உடையர் என்பதை உணர்த்த 'எவரினும் பெருமையார்' என உரைததான். அறிவும், புகழும் பெற்றிருத்தலோடு படைக்கலங்களும் பெற்றவர்களாதலின் 'வெம்படையினார்' என்றான். விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலங்கள் தந்தமை ''மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய் அண்ணல் தன் சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே (394) எனப் பாலகாண்டத்தில் கூறியதால் அறியலாம். அப்படைகளின் மிகுதியும், தெய்வத்தன்மையும், ஆற்றலும் புலப்பட ''நெடுங்கடவுள் வெம்படை'' எனப்பட்டது. முனிவர் அளித்த படைக்கலங்கள் உடையராதலின் வாலியை வெல்வது எளிது என்பதும் குறிப்பு. 5 |