3792. | 'நல்உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் - நயந்து, எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர்க் கடவுள்தன் பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும் வில் இறுத்தருளினான் - மிதிலை புக்க அனைய நாள். |
நல் உறுப்பு அமையும் - நல்ல உறுப்பிலக்கணம் அமைந்த; நம்பி யரில் முன்னவன் - அவ்ஆண் மக்களுள் முன் பிறந்தவனான இராமன்; மிதிலை புக்க அனைய நாள் - மிதிலை நகரத்துள் புகுந்த அந்த நாளில்; எல் உறுப்பு - ஒளி வீசும் கதிர்களை உறுப்பாக உடைய; அரிய பேரி எழுசுடர்க் கடவுள்தன் - அரிய பெரிய சூரிய பகவானின்; பல் இறுத்தவன்- பற்களை உதிர்த்தவனாகிய சிவபிரானின்; வலிக்கு அமை - வலிமைக்குஏற்ப அமைந்த; தியம்பகம் எனும்வில் - 'திரியம்பகம்' என்று சொல்லப்பெறும் வில்லை; நயந்து - (வளைக்க) விரும்பி; இறுத்து அருளினான் - ஒடித்து அருளினான். அரச குமாரர்களுக்கு ஏற்ற உறுப்பிலக்கணம் பெற்றவராதலின் 'நல் உறுப்பு அமையும் நம்பியர்' என்றார். ஆடவரில் சிறந்தோர் 'நம்பியர்' எனப்படுவர். எரிசுடர்க்கடவுள் பல்லிறுத்தது - வீரபத்திரனாகச் சிவபிரான் தக்கன் யாகத்தில் மற்ற தேவர்களோடு வந்திருந்த சூரியனின் பற்களைத் தகர்த்ததாகக் கூறப்படும் வரலாறு. 'சூரியனார் தொண்டை வாயினில் பற்களை, வாரி நெரித்தவா உந்தீபற' (திருவாசகம் - திருவுந்தி - 15) என்றது காண்க. தியம்பகம் - திரியம்பகம் என்பதன் திரிபு; சிவதனுசுவின் பெயர். மூன்று கண்களை உடையதால் திரியம்பகம் எனப்பட்டது. சுடர்மிகு கதிரவனின் பற்களைத் தகர்த்த சிவபிரானின் வில்லை முறித்த இராமனுக்கு வாலியை வெல்வது எளிய செயலே எனச் சுக்கிரீவனுக்கு இங்குக் குறிப்பாக உணர்த்தப்பட்டது. 7 |