3794. | 'தெவ் இரா வகை, நெடுஞ் சிகை விரா மழுவினான் அவ் இராமனையும், மா வலி தொலைந்து அருளினான், இவ் இராகவன்; வெகுண்டு எழும் இரா அனையன் ஆம் அவ்விராதனை இரா வகை துடைத்தருளினான். |
இவ் இராகவன் - இந்த இராமன்; தெவ் இரா வகை - பகைவர்களே இல்லாதபடி செய்த; நெடுஞ்சிகை விரா மழுவினான்- மிக்க சுவாலை பொருந்திய மழுவாயுதத்தை உடையவனாகிய; அவ் இராமனையும்- அந்தப் பரசுராமனையும்; மாவலி தொலைத்து - (அவனுடைய) மிக்க வலிமையை அழித்து; அருளினான் - (அவனைக் கொல்லாது) அருள் செய்தான்; வெகுண்டு எழும் - சினந்து எதிர்த்து வந்த; இரா அனையன் ஆம் - இருளைப் போன்றவனாகிய; அவ்விராதனை - அந்த விராதனையும்; இரா வகை - இவ்வுலகத்தில் இல்லாதபடி; துடைத்து அருளினான் - அழித்து அருளினான். பரசுராமன், தன் தந்தை ஜமதக்னி முனிவரைக் கொன்ற கார்த்த வீரியார்ச்சுனன் மக்களைக் கொன்று, அது முதல் அரசு குலத்தினர் மீது சினங்கொண்டு மன்னர் குலத்தை வேர் அறுத்தவனாதலின் 'தெவ் இரா வகை' என்றும், பரசுராமன் மழுப்படையையே தன் ஆயுதமாகக் கொண்டதனால் 'மழுவினான் அவ்இராமனையும்' என்றும் இராமனிடம் தோற்றுத் தன் தவவலிமை முழுவதும் அளித்துச் சென்றதால் 'மாவலி தொலைத்து' என்றும், பரசுராமன் தவவிரதம் பூண்டவனாதலின் அவன் உயிரைக் கொல்லாது தவத்தை மட்டும் பெற்று விடுவித்ததால் 'அருளினான்' என்றும் கூறினான். விராதன் - மிகுதியாய்த் துன்பம் செய்பவன் என்பது பொருள். குபேரன் சாபத்தால் அரக்கனாகி வனத்தில் திரிந்து வந்தவன். 'தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ' எனவும் 'கங்குல் பூசி வருகின்ற கலி காலம் எனவே' எனவும் ஆரணிய காண்டத்தில் (2529) கூறியாங்கு இங்கு 'இரா அனையன்' எனப்பட்டான். பகைவரை அழித்தலும் மறக்கருணையால் நிகழ்தலின் 'தொலைத்தருளினான்', 'துடைத்தருளினான்' என்றான். இராமன் பரசுராமன், விராதன் ஆகியோர் வலி தொலைத்தவனாதலின் அவன் வலியன் என்பதை விளக்கிச் சுக்கிரீவனின் அச்சம் தவிர்த்து நம்பிக்கை ஊட்டினான் அனுமன் என்க. ''அவ்விராமனையும்'' - 'அ' உலகறிசுட்டு; உம்மை உயர்வுசிறப்பு. பரசுராமனை அழித்த பால காண்ட நிகழ்ச்சியும் விராதனைத் தொலைத்த ஆரணிய காண்ட நிகழ்ச்சியும் இப்பாடலில் இடம்பெறுகின்றன. 9 |