3796. | 'ஆயமால் நாகர் தாழ் ஆழியானே அலால், காயமான் ஆயினான் யாவனே? காவலா! நீ அம் மான் நேர்தியால்; நேர் இல் மாரீசன் ஆம் மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான். |
காவலா - அரசே; காயமான் ஆயினான்- மானிட உடம்பில் தோன்றும் இந்த இராமன்; ஆயமால் நாகர் தாழ் - கூட்டமாகவுள்ள பெருமை பொருந்திய தேவர்கள் வணங்குகின்ற; ஆழியானே அலால் - திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்தருளும் திருமாலே அல்லாது; யாவனே- வேறு யாரவன்? நீ அம்மான் நேர்தி- நீ அப்பெரு மைக்குரியவனுடன்நட்புக் கொள்வாயாக; நேர்இல் - நிகரில்லாத வலிமையுடைய; மாரீசன் ஆம்- மாரீசன் என்கின்ற; மாயமான் ஆயினான் - மாயமானாய் வந்தஅரக்கனுக்கு; மா யமான் ஆயினான் - (இந்த இராமன்) பெரிய யமனாகநின்று அழித்தவனாவான். காயம் - உடம்பு; மான் - மனிதன். உடம்பால் மனிதனாகத் தோன்றியவன் என்பதால், தன்மையால் தெய்வம் என்பது பெறப்படும். யாவனே - ஏ, எதிர்மறை, வேறு எவனுமாகான்; இராமன் திருமாலே என்பதை வற்புறுத்த வந்தது. யமான் - யமன் என்பதன் நீட்டல் விகாரம். 11 |