3800. | 'தந்திருந்தனர்அருள்; தகை நெடு்ம் பகைஞன் ஆம் இந்திரன் சிறுவனுக்கு இறுதி, இன்று இசைதரும்; புந்தியின் பெருமையாய்! போதரு' என்று உரை செய்தான் - மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான். |
புந்தியின் பெருமையாய் - அறிவில் மேம்பட்டவனே! அருள் தந் திருந்தனர் - (இராமலக்குவர்) நம்மாட்டுக் கருணை வைத்துள்ளனர்; தகை நெடும் பகைஞன் ஆம் - (அதனால்) வலிமை மிக்க பகைவனா கிய; இந்திரன் சிறுவனுக்கு - இந்திரன் மகன் வாலிக்கு; இறுதி- அழிவு; இன்று இசைதரும்- இப்பொழுது நேரிடும்; போதரு - (அதனால் அவர்களோடு நட்புக் கொள்ளப்) புறப்பட்டு வருவாயாக; என்று - என்று; மந்திரம் கெழுமுநூல் மரபு- மன்னர்க்குரிய நீதி நூல்களின் மரபினை; உணர்ந்து உதவுவான்- உணர்ந்து சுக்கிரீவனுக்கு ஆலோசனை சொல்பவனாகிய அனுமன்; உரைசெய்தான் - சொன்னான். வாலியை வெல்ல, இராமன் நட்பைப் பெற்றுக் கொள்வதே தக்கது என்னும் அறிவு சுக்கிரீவனுக்கு உண்டு என்பது புலப்படப் 'புந்தியின் பெருமையாய்' என விளித்தான். புந்தி - புத்தி என்பதன் மெலித்தல் விகாரம்; போதர் - போதருக என்பதன் விகாரம். ''போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்'' (2-9-6) என்ற பெரியாழ்வார் பாசுரம் காண்க. அனுனுன் கூறும் ஆலோசனை, அரசியல் மரபிற்கேற்ப அமைந்திருக்கும் என்பதை 'மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான்' என்று கூறி அனுமனைச் சிறப்பித்தார். 15 |