3824.'நிலனும்,நீருமாய் நெருப்பும்,
     காற்றும், என்று
உலைவு இல் பூதம்
     நான்கு உடைய ஆற்றலான்;
அலையின் வேலை சூழ்
     கிடந்த ஆழி மா
மலையின்நின்றும்
     இம் மலையின் வாவுவான்;

     நிலனும் - நிலமும்; நீரும் - நீரும்; நெருப்பும் - நெருப்பும்;
காற்றும்- காற்றும்; என்று ஆய் - என்று பொருந்திய; உலைவு இல்
பூதம் -
அழிதல் இல்லாத பூதங்கள்; நான்கு உடைய - நான்கினுடைய;
ஆற்றலான் - ஆற்றலைத் தான் ஒருவனே பெற்றவன்; அலையின்
வேலை -
அலைகளைஉடைய எல்லைப்புறக் கடல்கள்; சூழ் கிடந்த -
சூழ்ந்து கிடந்ததான; ஆழிமாமலையின் நின்றும் - பெரிய சக்கரவாளகிரி
என்னும் மலையிலிருந்து; இம்மலையின் வாவுவாம் - இங்குள்ள மலையில்
தாவும் தன்மையுடையவன்.

     நிலம் முதலிய நான்கு பூதங்களின் ஆற்றலோடு,  சக்கர
வாளகிரியினின்று இங்குள்ள மலையில் தாவும் வல்லமையுடையவன் வாலி
என்பது உணர்த்தப்பட்டது. பூமியைச் சூழ்ந்துள்ள எல்லாக்கடல்கட்கும்
அப்பால் வட்டவடிவமான சக்கரவாள மலை சூழ்ந்துள்ளது என்பது புராண
மரபு. நிலத்திற்கு நீரும், நீர்க்கு நெருப்பும், நெருப்புக்குக் காற்றும்,
காரணமாதலால் அம்முறைப்படி வைத்தார்.  ஐந்து பூதங்களுள் ஆகாயத்தைக்
கூறாது விடுத்தது, அதற்கு வடிவமும் ஆற்றலும் புலப்படத் தோன்றாமையின்
என்க.

     வாலி நான்கு பூதங்களின் ஆற்றல் ஒரு சேரத் தன்னிடம்
அமையப்பெற்றவன் என்பது 'நீரும், நீர்தரு நெருப்பும், வன்காற்றும்,
கீழ்நிவந்த பாரும் சார்வலி படைத்தவன்' எனப் பின்னரும் கூறப்பெறுவான்.
(4000).  இம்மலை - இந்த ருசியமுக மலை - மதங்காச்சிரமத்தின் அருகே
வாலி வரின் தலைவெடித்துத் தூளாகிவிடும் என வந்த சாப நிகழ்ச்சிக்கு முன்,
சக்கரவாளகிரியிலிருந்து இம் மலைக்குத் தாண்டிக் குதிப்பவன் என்று
கொள்ளுதல் வேண்டும்.                                         39