3842. | 'அன்ன நாளில், மாயாவி, அப் பிலத்து, இன்ன வாயினூடு எய்தும் என்ன, யாம், பொன்னின் மால் வரைப் பொருப்பு ஒழித்து, வேறு உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம். |
அன்ன நாளில் - அங்ஙனம் சுக்கிரீவன் அரசேற்றுக் கொண்ட அந்த நாளில்; மாயாவி - மாயாவி; அப்பிலத்து - அந்தப் பிலத்திலிருந்து; இன்ன வாயில் ஊடு- இவ்வாயில் வழியாக; எய்தும் என்ன - இங்கு வருவான் என்று அஞ்சி; யாம் - நாங்கள்; பொன்னின் மால் வரை பொருப்பு - பொன் மயமான பெரிய மேருமலையாகிய மலையை மட்டும்; ஒழித்து - விடுத்து; வேறு உன்னு குன்று எலாம் - வேறு மனத்தால் எண்ணக்கூடிய மலைகள் அனைத்தையும்; உடன் அடுக்கினேம் - ஒன்று சேரக் கொண்டுவந்து அப்பில வாயிலில் ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கினோம். வாலியைக் கொன்ற மாயாவி, சுக்கிரீவனையும் கொல்ல இவ்வாயில் வழியே வருவான் என்ற அச்சத்தால் அவன் வராவண்ணம் பிலவாயிலை அடைத்துவிட்டோம் என்று வாயில் அடைத்ததற்குரிய காரணத்தைக் கூறினான்அனுமன். வாலி, தான் வராமல் இருக்கவேண்டி அடைத்ததாகக் குற்றம் சாட்டினான் ஆதலின், இது கூற வேண்டியதாயிற்று. மேரு மலை நீங்கலாகப் பிறமலைகளை எல்லாம் அடுக்கியதாகக் கூறியது உயர்வு நவிற்சி அணியாகும். 57 |