3843. | 'சேமம் அவ் வழிச் செய்து, செங் கதிர்க் கோமகன்தனைக் கொண்டுவந்து, யாம் மேவு குன்றின்மேல் வைகும் வேலைவாய், ஆவி உண்டனன் அவனை, அன்னவன். |
அவ்வழிச் சேமம் செய்து - அந்தப் பிலத்து வழியை (குன்றுகளால் அடைத்து) பாதுகாவலைச் செய்து; செங்கதிர்க் கோமகன்தனை - சிவந்த கதிர்களை உடைய சூரியன் மைந்தனாம் சுக்கிரீவனை; கொண்டு வந்து - அழைத்துக்கொண்டு வந்து; யாம் - நாங்கள்; மேவு குன்றின் மேல் - எங்கள் இருப்பிடமாகிய கிட்கிந்தை மலைமேல்; வைகும் வேலைவாய்- தங்கியிருந்த காலத்தில்; அவனை - அந்த மாயாவியை; அன்னவன் - அவ்வாலி; ஆவி உண்டனன் - கொன்றான். வழியை அடைத்த பின்னர்ச் சுக்கிரீவன் அரசனாக்கிக் கிட்கிந்தையில் தங்கியிருந்தபோது வாலி மாயாவியைக் கொன்றிட்டான் என்பதாம். சேமம் - பாதுகாவல்; உயிரை உண்டனன்- உண்ணப் பெறாததை உண்டதாகக் கூறுவது இலக்கணை. 58 |