3848.''ஆணை அஞ்சி, இவ் அரசை எய்தி வாழ்
நாண் இலாத என் நவையை, நல்குவாய்;
பூண் நிலாவு தோளினை! பொறாய்! '' என,
கோணினான், நெடுங் கொடுமை கூறினான்.

     பூண் நிலாவு தோளினை - அணிகள் அசைந்து விளங்கும் தோள்களை
உடையவனே! ஆணை அஞ்சி - வானரர்களின் கட்டளையை மறுப்பதற்கு
அஞ்சி; இவ் அரசை எய்தி - இந்த அரசாட்சியை ஏற்று; வாழ் - வாழ்ந்து
வந்த; நாண் இலாத - நாணம் இல்லாத; என் நவையை - என் குற்றத்தை;
பொறாய் -
பொறுத்துக் கொள்வாய்; நல்குவாய் - அருள்வாய்; என - எனச்
சுக்கிரீவன் வேண்டவும்; கோணினான் - (வாலி) மனம் மாறுபட்டவனாய்;
நெடுங்கொடுமை கூறினான் -
மிகக் கடுமையான சொற்களைச் சொன்னான்.

     வானரர்களின் விருப்பப்படி நடந்துகொண்ட செயல் அண்ணன்
தன்னைத் தவறாக நினைப்பதற்கு இடம் அளித்ததால் 'நாணிலாத' என்றான்.
'தகாதன செய்தற்கண் உள்ளம் ஒடுங்குதல்' எனப் பரிமேலழகர் நாணத்திற்கு
இலக்கணம் சொன்னது கருத்தக்கது.  சிறிது காலம் வாலிக்குரிய அரசை
ஆண்டதால் 'நவை' என்று குறிப்பிட்டான்.  தன்னையும் அறியாது நிகழ்ந்த
செயலைக் கூறிப் 'பொறாய், நல்குவாய்' என மன்னிப்பு வேண்டினான்.
இங்ஙனம் நிகழ்ந்தது கூறி வேண்டியும் வாலி சினம் கொண்டான் ஆதலின்
குற்றம் வாலியுடையது என்பதை அனுமன் உணர்த்தினான்.             63