அமைச்சர்களோடு கூடிச் சுக்கிரீவன் சிந்திக்க, அனுமன் பேசுதல்

3857.அனைய ஆண்டு உரைத்து,
     அனுமனே முதலிய அமைச்சர்,
நினைவும், கல்வியும், நீதியும்,
     சூழ்ச்சியும் நிறைந்தார்
எனையர், அன்னவரோடும் வேறு
     இருந்தனன், இரவி
தனையன்; அவ் வழி,
     சமீரணன் மகன் உரைதருவான்:

     இரவி தனையன் - சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; அனைய ஆண்டு
உரைத்து -
அவ்வாறு அங்குச் சொல்லிவிட்டு; நினைவும் கல்வியும் -
எண்ணமும் கல்வியும்; நீதியும் சூழ்ச்சியும்- நீதிநெறிகளும் ஆய்வுத்திறமும்;
நிறைந்தார்
- நிறைந்தவர்களாகிய; அனுமனே முதலிய அமைச்சர் -
அனுமன் முதலான அமைச்சர்கள்; எனையர் - எத்துணைபேர் இருந்தனரோ;
அன்னவரோடும் -
அத்தனை பேருடனும்; வேறு இருந்தனன்-
வேறிடத்தில் (ஆலோசனை செய்ய) இருந்தான்; அவ்வழி - அப்பொழுது;
சமீரணன் மகன் -
வாயு மைந்தனாகிய அனுமன்; உரைதருவான் -
பேசலாயினான்.

     வாலியைக் கொல்லும் ஆற்றல் இராமனுக்கு உண்டோ, இல்லையோ
எனச் சுக்கிரீவன் ஐயுற்று அதைப்பற்றி ஆலோசிக்க அனுமன் முதலிய
அமைச்சர்களை அழைத்துக் கொண்டு தனியிடத்தே சென்றான்.
அமைச்சர்களுக்குச் செயல்படுவதற்கேற்ற எண்ணமும், அறிவுத்திறனும்,
நீதிநெறியும், அரசன் ஆக்கத்திற்குத் தக்க சூழ்ச்சியும் வேண்டுதலின்
அந்நான்கினையும் உடைய அமைச்சர் என்றார்.  அனுமனே - ஏகாரம்
தேற்றப்பொருளில் மற்றையோரினும் அவனுக்குள்ள சிறப்பை
உணர்த்துவதாகும்.  ''ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும்
என்னும், வேற்றுமை இவனோடு இல்லையாம்'' (3767) என்ற இராமன்
கூற்றாலும் 'அறிவும் ஈதே, உரு ஈதே, ஆற்றல் ஈதே. . . . நீதி ஈதே நினக்கு'
(5338) என்ற சீதா பிராட்டியின் சொற்களாலும் அனுமனின் நிறம் விளங்குதல்
காண்க.

     நினைவும் கல்வியும் நீதியும் சூழ்ச்சியும் - எண்ணும்மை.  சமீரணன் -
காற்று.  நன்றாகச் சஞ்சரிக்க வல்லவன் எனும் காரணம்பற்றி வந்த பெயர்.
சுக்கிரீவன் ஐயத்தைக் குறிப்பால் உணர்ந்த அனுமன் அவன் ஐயம் நீங்கச்
சொல்லத் தொடங்கினான் என்க.  தனயன் - எதுகை நோக்கித் தனையன்
எனத் திரிந்தது.                                               72