மராமரங்களுள் ஒன்றைஅம்பினால் எய்யுமாறு இராமனை வேண்டுதல்

கலித்துறை

3865. 'ஏகவேண்டும் இந் நெறி' என,
     இனிது கொண்டு ஏகி,
'மாகம் நீண்டன குறுகிட
     நிமிர்ந்தன மரங்கள்
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று
     உருவ, நின் அம்பு
போகவே, என்தன் மனத்து இடர்
     போம்' எனப் புகன்றான்.

     இந்நெறி ஏகவேண்டும் என - (சுக்கிரீவன்) 'இவ்வழியாகச் செல்ல
வேண்டும்' என்று சொல்லி; இனிது கொண்டு ஏகி - (இராமலக்குவரை)
இனிமையாக அழைத்துச் சென்று; நீண்டன மாகம் - 'நீண்டதான ஆகாயமும்;
குறுகிட நிமிர்ந்தன -
குறுகித் தோன்றுமாறு உயர்ந்துள்ளனவாகிய; மரங்கள்
-
மராமரங்கள்; ஐந்தினோடு இரண்டின் ஆக - ஏழாக உள்ளனவற்றில்;
ஒன்று உருவ -
ஒன்றைத் துளைக்குமாறு; நின் அம்பு போகவே - உனது
அம்பொன்று சென்ற அளவில்; என்தன் மனத்து - எனது மனத்திலுள்ள;
இடர் போம் -
துன்பம் போகும்; எனப்புகன்றான் - என்று சொன்னான்.

     மராமரங்கள் ஏழனுள் ஒன்றை அம்பெய்து துளைத்தால் இராமன்
வாலியின் மார்பையும் துளைத்து வெல்ல வல்லவன் என்ற நம்பிக்கையில்
தன்மனத்துயர் நீங்குமெனச் சுக்கிரீவன் உரைத்தான்.  எனவே, இராமனது
வலிமையைத் தெளிவாக அறிந்து கொள்ள இராமன் அம்பு தொடுத்து ஒரு
மரத்தையேனும் துளைக்க வேண்டும் என அவன் உரைத்தான். மாகம் -
ஆகாயம்.  நீண்டன மாகம் என்றது ஒருமை பன்மை மயக்கம்.  வாலியிடத்துத்
தனக்குள்ள அச்சத்தால் சுக்கிரீவன் ஐயமுற்று வருந்தி இங்ஙனம் இராமனிடம்
கேட்டான் எனக் கொள்க.  'மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள்'
என்றது உயர்வு நவிற்சி அணி.                                    1