3870.நீடு நாள்களும், கோள்களும்,
     என்ன, மேல் நிமிர்ந்து
மாடு தோற்றுவ மலர்
     எனப் பொலிகின்ற வளத்த;
ஓடு மாச் சுடர் வெண்
     மதிக்கு, உட்கறுப்பு, உயர்ந்த
கோடு தேய்த்தலின், களங்கம் உற்று
     ஆம் எனும் குறிய;

     நீடு நாள்களும் - (அவ்வேழு மரங்களும்) நெடுங்காலமாக உள்ள
நட்சத்திரங்களும்; கோள்களும் - கிரகங்களும்; என்ன - என்று; மேல்
நிமிர்ந்து -
விண்ணில் உயர்ந்து; மாடு தோற்றுவ - பக்கங்களில்
விளங்குவன; மலர் என - (இம்மரங்களின்) மலர்கள் என்னும்படி;
பொலிகின்ற வளத்த -
விளங்குகின்ற செழுமையை உடையன; ஓடு மாச்சுடர்
வெண் மதிக்கு -
(வானில்) செல்லுகின்ற மிக்க ஒளியை உடைய
வெண்மதிக்கு; உட்கறுப்பு - அதனுள் அமைந்துள்ள கறை; உயர்ந்த கோடு
தேய்த்தலின்
- (இம்மரங்களின்) உயர்ந்த கிளைகள் தேய்த்ததால்; களங்கம்
உற்று ஆம் -
களங்கம் என்று ஏற்பட்டது ஆகும்; எனும் குறிய - என்று
குறிக்கத்தக்கவை.

     மரங்களின் கிளைகள் அருகில் காணப்பட்ட நட்சத்திரங்களும்
கிரகங்களும் மரங்களில் மலர்ந்த மலர்கள் போலக் காணப்பட்டன.
இம்மரங்களின் கிளைகள் சந்திரனை உராய்ந்து தேய்த்ததால் ஏற்பட்ட
தழும்புகளே களங்கம் என்று சொல்லப்படுகின்றன என்று மரங்களின் வளர்ச்சி
கூறப்பட்டுள்ளது.  சந்திரனின் மறு, மரக்கிளைகளின் உராய்வால் ஏற்பட்ட
தழும்பு எனக் கூறியதால் ஏதுத்தற்குறிப்பேற்ற அணியாகும்.  கோள்கள் -
சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், பிரகஸ்பதி, சுக்கிரன், சனி, ராகு, கேது
என ஒன்பதாம்.                                                 6