3871. | தீது அறும் பெருஞ் சாகைகள் தழைக்கின்ற செயலால் வேதம் என்னவும் தகுவன; விசும்பினும் உயர்ந்த ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின், அங்கு அவன் ஊர் ஓதிமம், தனி பெடையொடும் புடை இருந்து உறைவ. |
தீது அறம் - (அம்மரங்கள்) அழிதல் இல்லாத; பெரும் சாகைகள் - பெரிய கிளைகள்; தழைக்கின்ற செயலால் - செழித்து வளர்கின்ற செயலால்; வேதம் என்னவும் - வேதங்கள் என்று சொல்லவும்; தகுவன - தகுதியுடையன; விசும்பினும் உயர்ந்த - (அவை) வான மண்டலத்தினும் உயர்ந்து விளங்குவன; ஆதி அண்டம் முன்பு அளித்தவன் - பழமையான அண்டங்களை முன்னே படைத்தளித்த பிரமனுடைய; உலகின் அங்கு - சத்தியலோகமாகிய அவ்விடத்தில்; அவன் ஊர் - அவன் ஏறிச் செல்கின்ற; ஓதிமம் - அன்னப்பறவை; தனிப் பெடையோடும்- தனது ஒப்பற்ற பெடை அன்னத்தோடு; புடை இருந்து உறைவ - அம்மரங்களின் ஒரு பக்கத்தே இருந்து வாழ இடமாவன. வேதங்களின் சாகைகள் அழிவற்றனவாயும், அளவற்றனவாயும் இருத்தல் போல மரங்களின் கிளைகளும் அழிவற்றும், அளவற்றும் விளங்குகின்றன என்றார். சாகை என்னும் சொல்லிற்கு வேதங்களின் கிளைப் பகுதி, மரக்கிளை, என்றும் பொருள்கள் உள்ளன. ஆதலால் 'சாகைகள் தழைக்கின்ற செயலால் வேதமென்னத் தகுவன' என்றார். செம்மொழிச் சிலேடை அணி பொருந்தியது. விசும்பின் - இன் எல்லைப் பொருளது. பிரமனுக்குரிய அன்னப் பறவை தங்கிய இடம் என்றதால் அம்மரங்கள் பிரமலோகத்திற்கும் மேல் உயர்ந்து வளர்ந்திருந்தன என்பதாம். இஃது உயர்வு நவிற்சி அணி. 7 |