3882. | அன்னது ஆயினும், அறத்தினுக்கு ஆர் உயிர்த் துணைவன் என்னும் தன்மையை நோக்கினர் யாவரும், எவையும்; பொன்னின் வார் கழல் புது நறுந் தாமரை பூண்டு, சென்னிமேல் கொளூஉ அருக்கன் சேய், இவை இவை செப்பும்: |
அன்னது ஆயினும் - அவ்வாறு அச்சம் உண்டானாலும்; அறத் தினுக்கு- (இராமன்) அறத்திற்கு; ஆர் உயிர்த் துணைவன்- அரிய உயிர்த் துணைவனாய் இருப்பான்; என்னும் தன்மையை - என்னும் இயல்பை; யாவரும் எவையும் - எல்லோரும் யாவையும்; நோக்கினர் - நோக்கி அச்சம் நீங்கினர்; பொன்னின் வார்கழல் - (அப்பொழுது) பொன்னால் ஆகிய நீண்ட வீரக்கழல் அணிந்த; புது நறுந்தாமரை - அன்றலர்ந்த நறுமணமிக்க தாமரை மலர்போன்ற இராமன் திருவடிகளை; பூண்டு - ஏற்று; சென்னை மேல் கொளூஉ - தலைமேல் கொண்டு; அருக்கன் சேய் - சூரியன் மகனான சுக்கிரீவன்; இவை இவை செப்பும் - இன்னின்ன வார்த்தைகளைச் சொல்லலானான். இராமன் அறம் அல்லதைச் செய்யான் என்ற நம்பிக்கையால் அவர்களது அச்சம் நீங்கியது. அவன் அறத்திற்குத் துணையாயிருப்பவன், அறத்தை நிலை நாட்ட வல்லன் என்பதை ''அறம் தரு வள்ளல்'' ''மெய்யற மூர்த்தி'', அறந்தரு சிந்தை என் ஆவி நாயகன்'' என்னும் தொடர்களும் (3372, 5882, 5102) உணர்த்தும். ''உண்டு எனும் தருமமே உருவமா உடையநிற் கண்டு கொண்டேன்'' (4066). 'அறைகழல் இராமனாகி அறநெறி நிறுத்த வந்தது'' (4073) என்னும் வாலியின் கூற்றும் ஒப்பு நோக்கத்தக்கன. யாவரும் எவையும் நோக்கினர்: உயர்திணையோடு சேர்ந்த அஃறிணைப் பொருளும் உணர்திணை வினை கொண்டது. கழல் தாமரை - கழலணிந்த தாமரை போன்ற அடி. இஃது இல்பொருள் உவமை. தாமரை இங்கு உவமை ஆகுபெயர். கொளூஉ - செய்யூ என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம்; இவை, இவை - அடுக்குத் தொடர்; மிகுதியும் பல் வகைமையும்குறித்தது. 18 |