3884.'என் எனக்கு அரியது, எப்பொருளும்
     எற்கு எளிது அலால்?
உன்னை இத் தலை
     விடுத்து உதவினார், விதியினார்;
அன்னை ஒப்புடைய உன்
     அடியருக்கு அடியென யான்;
மன்னவர்க்கு அரச!' என்று
     உரைசெய்தான் - வசை இலான்.

     மன்னவர்க்கு அரச - அரசர்களுக்கு அரசனே!விதியினார் -
(முற்பிறப்பில் யான் செய்த) நல்லூழானது; உன்னை இத்தலை விடுத்து -
உன்னை இவ்விடத்தே கொண்டு வந்து; உதவினார் - (எனக்கு) அளித்தது;
எப்பொருளும் எற்கு -
எந்த காரியமும் எனக்கு; எளிது அலால் - (செய்து
முடித்தற்கு) எளிதாகுமேயன்றி; எனக்கு அரியது என் - எனக்குச்
செய்வதற்கு அரிதாக இருக்கக் கூடியது யாது உளது? அன்னை ஒப்புடைய -
(அதனால்) தாய்க்கு நிகரான; உன் அடியருக்கு - உனது அடியார்களுக்கு;
அடியென் யான் -
யான் அடியவனாவேன்; என்று - என்று; வசைஇலான் -
பழியற்றவனாகிய சுக்கிரீவன்; உரைசெய்தான் - உரைத்தான்.

     தனது ஊழ்வினை, பரம்பொருளாகிய இராமனைத் தன்னிடத்தில் சேர்த்து
விட்டதனால் தனக்குச் செயற்கரியதாக எந்தச் செயலும் இல்லை என மகிழ்ந்த
சுக்கிரீவன், இராமன் பெருமையை உணர்ந்தவனாய் இங்ஙனம் போற்றலாயினன்.
ஊழ்வினை தனக்குச் செய்த நன்மை கருதி 'விதியினார்' என்று பலர்பால்
விகுதி கொடுத்துக் கூறினான்.  இது திணை வழுவமைதியோடு எண்
வழுவமைதியும் ஆகும்.  ''அடியருக்கு அடியென்' - 'யான் இனி உன்
அடியார்க்கு அடியனால் இருந்து பணிபுரிவேன்'' என்பதைச் சுக்கிரீவன்
புலப்படுத்தினான்.                                              20