3887. | 'தென் புலக் கிழவன் ஊர் மயிடமோ? திசையின் வாழ் வன்பு உலக் கரி மடிந்தது கொலோ? மகரமீன் என்பு உலப்புற உலர்ந்தது கொலோ? இது எனா, அன்பு உலப்பு அரிய நீ, உரை செய்வாய்' என, அவன், |
இது - இந்த வறண்ட உடல்; தென்புலக் கிழவன் - தெற்குத் திசைக்குத் தலைவனான யமன்; ஊர் மயிடமோ - வாகனமாக ஏறிச் செலுத்துகின்ற எருமைக் கடாவோ?திசையின் வாழ் - திசைகளில் வாழ்கின்ற; வன்பு உலக் கரி - வலிைை பொருந்திய கல் போன்ற யானைகளுள் ஒன்று; மடிந்தது கொலோ - மடிந்து கிடக்கிறதோ? மகர மீன் - மகரம் என்னும் பெரிய மீன்; உலப்பு உற - இறந்து படி; என்பு உலர்ந்தது கொலோ - அதன் எலும்பு உலர்ந்து கிடக்கின்றதோ?எனா - என்று வியந்து; அன்பு உலப்பரிய நீ- 'அன்பு குறைவுபடாதவனாகிய நீ; உரை செய்வாய் - சொல்வாய்; என - என்று (இராமன் கேட்க); அவன் - அந்தச் சுக்கிரீவன். . . 'அவன்' என்னும் சுட்டுப் பெயர் பதினான்காம் பாடலில் 'உரை செய்தான்' என்பதனோடு முடியும். மகரம் - சுறா எனும் மீன். இது மரக்கலத்தையும் கவிழ்க்க வல்லது. உலம் திரண்டகல்; கொலோ - கொல் ஐயப்பொருள் இடைச்சொல். துந்துபியின் எலும்புக் கூட்டைப் பல வகையாய் ஐயயேமற் கொண்டு கூறியதாதலின் ஐய அணியின் பாற்படும். 2 |