3896.'தலையின்மேல் அடி பட, கடிது
     சாய் நெடிய தாள்
உலைய, வாய் முழை திறந்து
     உதிரஆறு ஒழுக, மா
மலையின் மேல் உரும்
     இடித்தென்ன, வான் மண்ணொடும்
குலைய, மா திசைகளும்
     செவிடுற, - குத்தினான்.*

     தலையின் மேல் அடிபட - தலை மீது அடிபடும் படியும்; கடிது சாய்
நெடிய தாள் -
விரைவில் விழுந்து நீண்ட கால்கள்; உலைய- ஒடியும்
படியும்; முழை வாய் திறந்து - மலைக்குகை போன்ற வாய் திறந்து; உதிர
ஆறு ஒழுக -
குருதி ஆறு பெருகவும்; மா மலையின் மேல் - பெரிய
மலையின் மீது; உரும் இடித்தென்ன- இடி இடித்தாற் போன்று; வான்
மண்ணொடும் குலைய -
விண்ணுலகமும நிலவுலகமும் நடுங்கவும்;
மாதிசைகளும் செவிடுற -
பெரிய திசைகள் எல்லாம் செவிடுபடவும்;
குத்தினான் -
குத்தினான்.

     விண்ணுலகமும் மண்ணுலகமும் நடுங்க, திசைகள் செவிடுபட, அசுரன்
கால் ஒடிந்து விழ, வாய்வழியே குருதி பெருக்கெடுத்தோட, மலைமீது இடி
விழுந்தாற்போல அவ்வரக்கன் தலைமேல் வாலி குத்தினான் என்பது
பொருளாகும்.  வாலி கொடுத்த குத்தின் வலிமை இதனால் புலப்படும்.     11