3898. | 'புயல் கடந்து, இரவிதன் புகல் கடந்து, அயல் உளோர் இயலும் மண்டிலம் இகந்து, எனையவும் தவிர, மேல் வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய, அன்று உயிரும் விண் படர, இவ் உடலும் இப் பரிசுஅரோ! |
அவன் - அந்த வாலி; புயல் கடந்து - மேக மண்டலத்தைத் தாண்டி; இரவிதன் புகல் கடந்து- சூரியன் இருக்கும் இடத்தையும் தாண்டி; அயல் உளோர் இயலும் மண்டிலம் - மற்றைய தேவர்கள் பொருந்தி வாழ்கின்ற மண்டலங்களை; இகந்து - கடந்து; எனையவும் தவிர - மற்றும் எல்லா மேலிடங்களையும் கடக்கும்படி; வயிரவன் கரதலத்து - உறுதியான வலிய கயினால்; மேல் வலிந்து எறிய - (அவ்வரக்கனை) மேலே வலிமையோடு வீச; அன்று - அப்பொழுது; உயிரும் விண் படர - அவன் உயிர் மேலுலகத்திற்குச் செல்ல; இவ்வுடலும் - இந்த உடலும்; இப்பரிசு - இவ்விதமாயிற்று. (கீழே விழுந்து இங்கே கிடந்தது). ''வாலி துந்துபி உடலை மேலே வீசி எறிய, அவன் உயிர் பிரிய, உடல் கீழே விழுந்தது என்றான். வான மண்டலங்கள் பலவற்றைக் கடந்து வீசப்பட்ட உடல் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. 13 |