3905.தெரிவுற நோக்கினன்,தெரிவை
     மெய் அணி;
எரிகனல் எய்திய
    மெழுகின் யாக்கைபோல்
உருகினன் என்கிலம்; உயிருக்கு
    ஊற்றம் ஆய்ப்
பருகினன் என்கிலம்; பகர்வது
    என்கொல் யாம்?

     தெரிவை மெய் அணி - சீதையின் மேனியில் முன்னர் அணிந்திருந்த
அணிகலன்களை; தெரிவுற நோக்கினன் - (இராமன்) நன்றாகப் பார்த்தான்;
எரிகனல் எய்திய -
(பார்த்த அளவில்) எரிகின்ற நெருப்பில் சேர்ந்த;
மெழுகின் -
மெழுகினாலான; யாக்கை போல் - உடம்பு போல; உருகினன்
என்கிலம்
- உருகினான் என்று சொல்ல வல்லோம் அல்லேம்; உயிர்க்கு -
(அவ்வணிகலன்களாகிய அமுதைத்) தன் உயிர்க்கு; ஊற்றம் ஆய் - வலிமை
தருவதாகக் கருதி; பருகினன் என்கிலம் - பருகினான் என்றும் சொல்ல
வல்லோம் அல்லேம்; யாம் பகர்வது என் கொல் - நாங்கள் (இராமன்
அடைந்த நிலையைப் பற்றிச்) சொல்லக் கூடியது யாது உளது?

     இராமன் அணிகலன்களைக் கண்ட மாத்திரத்தே சீதையின்
அணிகலன்கள் என அறிந்துகொண்டதால் நெருப்பிலிட்ட மெழுகு போல உடல்
உருகி, அவற்றைத் தனது உயிர்க்கு ஆதாரமாகவும் கொண்டனன்.
இருவகையினுள் ஒன்றைத் துணிந்து கூறமுடியாமையால் கம்பர் 'என்கிலம்'
என இரண்டிடத்தும் பயன்படுத்தினார்.  இராமன் அடைந்த உணர்வு நிலை
எம்மனோரால் சொல்லக்கூடியதாயில்லை என்பது கருத்து.  'பருகினன்'
என்றதால் அணிகலன்களாகிய அமுது என உரை விரிக்கப்பட்டது.
ஆபரணங்களைக் கண்ட இராமன் நிலையை அனுமன் சீதையிடம்
''கொற்றவற்கு, ஆண்டுக் காட்டிக் கொடுத்த போடு, அடுத்த தன்மை,
பெற்றியின் உணர்தற்பாற்றோ? உயிர்நிலை பிறிதும் உண்டோ?'' (5262) எனக்
கூறியுள்ளமையும் காண்க.  ஆய் - ஆக; எச்சத்திரிபு. பருகினன் - பருக
முடியாததைப் பருகினன் என்றது இலக்கணை.  தெரிவை - 'பெண்' என்னும்
பொது நிலையில் சீதையைக் குறித்தது.  இவ்வாறு இன்றித் 'தெரிவைப்பருவம்
உடைய சீதை' எனக் கொள்வாரும்உளர்.                           5