3906.நல்குவதுஎன் இனி? நங்கை கொங்கையைப்
புல்கிய பூணும், அக் கொங்கை போன்றன;
அல்குலின் அணிகளும், அல்குல் ஆயின;
பல் கலன் பிறவும், அப் படிவம் ஆனவே.

     நங்கை- பிராட்டியின்; கொங்கையைப் புல்கிய பூணும்- தனங்களைத்
தழுவியவாறு அணியப்பெற்றிருந்த ஆரம் முதலிய அணிகலன்களும்;
அக்கொங்கை போன்றன -
(இராமபிரானுக்கு) அப்பிராட்டியின் தனங்கள்
போலத் தோன்றின; அல்குலின் அணிகளும் - அல்குலின்மீது அணியப்
பெற்ற மேகலை முதலிய அணிகலன்களும்; அல்குல் ஆயின - அல்குல்
போன்றன ஆயின; பல்கலன் பிறவும் - மற்ற அவயவங்களில் அணிப்பெற்ற
பிற அணிகலன்களும்; அப் படிவம் ஆனவே - அந்தந்த அவயவங்களாகவே
தோன்றின; இனி நல்குவது என் -  மேலும் அந்த அணிகலன்கள்
இராமனுக்குச் செய்யக்கூடியது யாது?

     ஆரம், மேகலை முதலிய அணிகலன்களைப் பார்த்த போது அவறறை
அணிந்த சீதையின் அவயவங்கை நேரிற் கண்டாற் போன்ற ஆறுதலை
இராமன் அடைந்தான் என்பது கருத்தாகும்.  'என்' என்னும் வினா இங்கே
இன்மை குறித்தது.  இப்பாடலில் அணிகலன்கள் அவயவங்களாகவே
தோன்றினமையால் மயக்கவணி.                               6