சுக்கிரீவன் தேற்றுதல்

3910.விடம் பரந்தனையது ஓர்
     வெம்மை மீக்கொள,
நெடும் பொழுது, உணர்வினோடு
     உயிர்ப்பு நீங்கிய
தடம் பெருங் கண்ணனைத்
     தாங்கினான், தனது
உடம்பினில் செறி மயிர்
     சுறுக்கென்று ஏறவே.

     விடம் பரந்து அனையது ஓர் வெம்மை - (உடம்பில்) நஞ்சு
பரவினால் போன்றதொரு வெப்பம்; மீக்கொள - மிகுதலால்; நெடும் பொழுது
-
நீண்ட நேரம்; உணர்வினோடு உயிர்ப்பு- அறிவும் மூச்சும்; நீங்கிய -
நீங்கிக் (கீழே விழுபவனான); தடம் பெருங் கண்ணனை - மிகப்பெரிய
கண்களை உடைய இராமனை; தனது உடம்பினில் - தனது உடம்பில்;
செறிமயிர் சுறுக்கென்று ஏறவே -
பொருந்திய முடி சுருக்கென்று அவன்
உடம்பில் தைக்கும்படி; தாங்கினான் - (சுக்கிரீவன்) தாங்கிக் கொண்டான்.

     நஞ்சு பரவுதல் விரைவில் நடைபெறுவதுபோல், பிரிவுத் துயரால் ஏற்பட்ட
வெப்பம் விரைந்து தாக்கியதால் இராமன் உணர்வும், உயிர்ப்பும் நீங்கிய
நிலையை அடையலுற்றான், சுக்கிரீவன் உடம்பிலுள்ள மயிர்களின் வன்மையும்
இராமனது மென்மையும் பற்றித் 'தனது உடம்பினில் செறிமயிர் சுருக்கென்று
ஏற' என்றார். பரந்தது அனையது என்பது பரந்தனையது என்று
விகாரமாயிற்று.  தடம் பெரும் - ஒரு பொருட்பன்மொழி.             10