3911. | தாங்கினன்இருத்தி, அத் துயரம் தாங்கலாது ஏங்கிய நெஞ்சினன், இரங்கி விம்முவான் - 'வீங்கிய தோளினாய்! வினையினேன் உயிர் வாங்கினென், இவ் அணி வருவித்தே' என. |
தாங்கினன் இருத்தி - (அங்ஙனம் சுக்கிரீவன் இராமனைத்) தாங் கிக்கொண்டு உட்காரவைத்து; அத்துயரம் தாங்கலாது - (அப்பெருமா னுக்கு ஏற்பட்ட) அத்துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல்; ஏங்கிய நெஞ்சினன் - வருந்திய மனத்தினனாய்; வீங்கிய தோளினாய் - (இராமனை நோக்கி) 'பருத்த தோள்களை உடையவனே! வினையினேன் - தீவினையுடையேனாகிய நான்; இவ் அணி வருவித்தே - இந்த அணிகலன்களை உம்மிடம் கொண்டு வரச்செய்து; உயிர் வாங்கினென் - உமது உயிரைப் போக்கினேன்'; எனா - என்ற கூறி; இரங்கி விம்முவான் - இரங்கி விம்மலுற்று வருந்தினான். சீதையின் அணிகலன்களைக் கொணர்ந்து காட்டியமையால்தான் இராமன் இவ்வளவு துன்பம் அடைந்தான் ஆதலின், அத்துன்பத்திற்குக் காரணமான தன்னைத் 'தீவினையுடையேன்' எனக் குறிப்பிட்டு வருந்தினான் சுக்கிரீவன். தாங்கினன் - முற்றெச்சம். 11 |