3912.அயனுடை அண்டத்தின்அப் புறத்தையும்
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி, உன்
உயர் புகழ்த் தேவியை உதவற்பாலெனால்;
துயர் உழந்து அயர்தியோ, சுருதி நூல் வலாய்?

     சுருதி நூல் வலாய்- வேதநூல் வல்லோனே! அயனுடை அண்
டத்தின்
- பிரமாண்டத்திற்கு; அப்புறத்தையும் - அப்பாற்பட்ட
இடங்களையும்; மயர்வு அற நாடி - மயக்கம் இல்லாமல் நன்றாகத் தேடி;
என் வலியும் காட்டி -
என் வலிமையையும் தெரியப்படுத்தி; உன் உயர்
புகழ்த் தேவியை -
உன் சிறந்த புகழை உடைய தேவியை; உதவற்பா
லென்-
மீட்டு உன்னிடம் சேர்ப்பிக்கக் கடவேன்; துயர் உழந்து
அயர்தியோ -
(ஆகவே) துன்பம் அடைந்து தளர்வடைவாயோ? (தளர
வேண்டாம்);

     இராவணன் சீதையை இந்த அண்ட கோளத்திற்கு அப்பால் ஒளித்து
வைத்திருந்தாலும் அங்கும் சென்று தேடத் தயாராக இருப்பதை
'அப்புறத்தையும் மயர்வற நாடி' என்றதால் உணர்த்தினான்.  ஒளித்தவன்
யாவனாயினும் அவனை வெல்லும் திறம் தனக்கிருப்பதை 'வலியும் காட்டி'
என்று அறிவித்தான்.  தேடி, வலிமை காட்டிச் சீதையை மீட்டுத் தரத்
தானிருக்க இராமன் துன்புற்று வருந்த வேண்டா எனச் சுக்கிரீவன் உரைத்தான்.

     அயனுடை அண்டம் - பிரமதேவனால் படைக்கப்பெற்ற அண்ட
கோளம். 'அண்டத்தின் அப்புறத்தையும்' என்று கூறியதால் அதற்கு உட்பட்ட
உலகங்களில் தேடுதல் என்பது சொல்லாமல் பெறப்படுகிறது.
'உயர்புகழ்த்தேவி' எனச் சுக்கிரீவன் குறிப்பிட்டது போலப் 'பெரும்புகழ்ச்
சனகியோ நல்லள்' (1352) என வசிட்டரும், 'உயர் புகழ்க்கு ஒருத்தி' (6034)
என அனுமனும் கூறினமை காண்க. உடைய என்னும் எச்சம் ஈறு கெட்டு
உடை என நின்றது. சுருதி நூல் - சுருதியாகிய நூல் எனப் பண்புத்
தொகையாம்.                                               12