3916.'பெருமையோர் ஆயினும்,
     பெருமை பேசலார்;
கருமமே அல்லது பிறிது
     என் கண்டது?
தருமம், நீ அல்லது
     தனித்து வேறு உண்டோ?
அருமை ஏது உனக்கு
     நின்று அவலம் கூர்தியோ?

     பெருமையோர் ஆயினும் - பெருமைக்கு உரியவர்கள் ஆனாலும்;
பெருமை பேசலார் -
தங்கள் பெருமையைத் தாங்களே பேச மாட்டார்கள்;
கருமமே அல்லது -
அவர்கள் தம் கடமையைச் செய்வதல்லது; பிறிது என்
கண்டது - 
அறிந்தது வேறு என்ன? (ஒன்றுமில்லை); தருமம் நீ அல்லது -
தருமம் என்பது உன்னையன்றி; தனித்து வேறு உண்டோ - தனியாக
வேறொன்று உளதோ? (இல்லை); உனக்கு அருமை ஏது - உனக்குச்
செய்தற்கரிய செயல் எது? (ஒன்றும் இல்லை); நின்று அவலம் கூர்தியோ -
இவ்வாறாகவும், திகைத்து நின்று துயர் மிகுந்து வருந்தக் கடவையோ?

     பெரியோர்கள் தம் ஆற்றலைச் செயலில் காட்டுவரே அன்றிப்
பேசமாட்டார்கள்.  ஆதலின் இராமன் தன் பெருமையைச் செயலால் காட்ட
வேண்டுமேயன்றி அவலம் கூர்தல் ஏற்றதன்று என்றான், சுக்கிரீவன்.
'பணியுமாம் பெருமை' என்பதால் பெரியவர்கள் அடக்கத்தால் தம்
பெருமையைத் தாமே பேசுதல் இல்லை.  அவர்கள் சிந்தை காரியத்தில்
மட்டுமே இருக்குமாதலின் அவர்கள் வேறு எதனையும் நோக்குதல் இல்லை.
அனுமன் தன் பெருமை பேசாமையை 'விளம்பான் தான்தன் வென்றியை
உரைப்ப வெள்கி' (6015) என்ற அடி உணர்த்தும்.  'தருமமே நீ அல்லது
வேறுண்டோ?' என்ற கருத்தை 'அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்' (1249)
என்ற வசிட்டர் கூற்றிலும், ''உண்டு எனும் தருமமே உருவமா உடைய
நின்கண்டு கொண்டேன்'' (4066) என்ற வாலி கூற்றிலும் காண்க.

     பெருமையோர் ஆயினும் - உயர்வு சிறப்பும்மை, கூர்தியோ என்பதில்
'கூர்' மிகுதிப் பொருளை உணர்த்தும் உரிச்சொல்.                    16