3918.'என்னுடைச்சிறு குறை
     முடித்தல் ஈண்டு ஒரீஇப்
பின்னுடைத்து ஆயினும்
     ஆக! பேதுறும்
மின் இடைச் சனகியை
     மீட்டு, மீள்துமால் -
பொன்னுடைச் சிலையினாய்! -
     விரைந்து போய்' என்றான்.

     பொன்னுடைச் சிலையினாய் - அழகிய வில்லை உடையனே!
என்னுடைச் சிறுகுறை -
என்னுடைய சிறிய குறையை; முடித்தல் -
நிறைவேற்றுதல் என்பதை; ஈண்டு ஒரீஇ - இப்பொழுது தவிர்ந்து;
பின்னுடைத்து ஆயினும் ஆக -
பின்னர் மேற்கொள்ளப் படுவதாயினும்
ஆகட்டும்; விரைந்து போய் - விரைந்து சென்று; பேதுறும்மின்
இடைச் சனகியை -
இராவணனால் துன்புற்று வருந்தும் மின்னல் போன்ற
இடையை உடைய சீதையை; மீட்டு மீள்தும் - (அவனிடமிருந்து) மீட்டுக்
கொண்டு திரும்புவோம்; என்றான் - என்று (சுக்கிரீவன்) சொன்னான்.

     சிறுகுறை என்றது வாலியை வென்ற தன் மனைவி உருமையை மீட்டுத்
தருதலை.  இராமலக்குவரின் திறமையைக் கண்டதால் வாலியை வெல்லும்
செயல் அவர்களுக்கு எளிதாகும் திறத்தால் 'சிறுகுறை' எனக் குறித்தான். தன்
துயரினும் இராமன் துயரம் பெரிது எனக் கருதியதாலும் தன் குறையைப்
பின்னர் மேற் கொள்ளக்கூடிய 'சிறுகுறை' எனவும் கருதினான் எனலாம்.
இராமனின் துயரம் போக்குதலே தான் முதலில் செய்ய வேண்டியது என்ற
சுக்கிரீவனின் கருத்து இங்கு நோக்கத்தக்கது.  மின்இடை - ஒளியாலும்,
மெல்லிய வடிவாலும் இடைக்கு மின்னல் உவமை.  ஒரீஇ - சொல்லிசை
அளபெடை; மீள்துமால் - ஆல் அசை.                           18