3921.'வாள் நெடுங்கண்ணி என்
     வரவு நோக்க, யான்,
தாள் நெடுங் கிரியோடும்,
     தடங்கள் தம்மொடும்,
பூணொடும், புலம்பினென் பொழுது
     போக்கி, இந்
நாண் நெடுஞ் சிலை சுமந்து,
     உழல்வென்; நாண் இலேன்.

     வாள் நெடுங்கண்ணி - வாள் போன்ற கூர்மையும் ஒளியும் படைத்த
நீண்ட கண்களை உடைய சீதை; என் வரவு நோக்க - யான் வந்து மீட்பேன்
என்று என் வரவுநோக்கி வருந்தியிருக்க; யான் - யானோ; தாள்நெடும்
கிரியொடும் -
அடிவாரங்களை உடைய நெடிது உயர்ந்த மலைகளொடும்;
தடங்கள் தம்மொடும் -
நீர்நிலைகளொடும்; பூணொடும் - அவள் களைந்து
இட்ட அணிகலன்களோடும்; புலம்பினென் பொழுது போக்கி -
புலம்பியவனாய்ப் பொழுதைக் கழித்து; நாண் நெடுஞ் சிலை சுமந்து -
நாணொடு விளங்கும் நெடிய வில்லைச் சுமந்து கொண்டு; உழல்வென் -
திரிபவனாய்; நாண் இலேன் - வெட்கமில்லாதவனானேன்.

     தன்னை மீட்க இராமன் எப்படியும் வருவான் என்ற நம்பிக்கையுடன்
எதிர் நோக்குவாள் என்பதால் 'என் வரவு நோக்க' என்றான்.  ''சுருதி
நாயகன், வரும் வரும்' என்பது ஓர் துணிவால், கருதி மாதிரம் அனைத்தையும்
அளக்கின்ற கண்ணாள்' (5077) எனப் பின்னர் வருவது காண்க.
மலைகளொடும், நீர்நிலைகளொடும், அணிகலன்களொடும் புலம்பிப் பொழுதை
வீணாகக் கழித்துக் கொண்டு, வில்லைப் பெற்றும் சீதையை மீட்காமல்
இருத்தலால் 'நாணிலேன்' எனத் தன்னையே இழித்துக் கூறிக்கொண்டான்,
பகைவரை வெல்லப் பயன்படவில்லையெனில் நாணடை வில்லும் வீரர்க்குச்
சுமையாகும் என்பதால் 'சுமந்து' என்றான்.  நாண் - முன்னது வில்லின் நாண்;
பின்னது நாணம் என்னும் பண்பைக் குறிக்கும். நாணிலாதவன் என்றதால்
நாணுடை வில்லும் சுமையாயிற்று என்பதில் உள்ள சொல் நயம் காண்க.
'வன்தாள் சிலை ஏந்தி, வாளிக் கடல் சுமந்து, நின்றேனும் நின்றேன்;
நெடுமரம்போல் நின்றேனே''; 'வில் உடையேன் சடாயு முன்னர் இராமன்
புலம்புவதும் காண்க.  வில் சுமையாவதை 'வில்லும் சுமக்கப் பிறந்தேன்' (1740)
என்ற இலக்குவன் கூற்றும் உணர்த்தும்.  சீதையின் பிரிவால் இராமன்
மலையொடு புலம்பி இருந்தமை 'குன்றே கடிது ஓடினை; கோமளக் கொம்பர்
அன்ன என் தேவியைக் காட்டுதி' (5313) என்பதாலும், தடங்களோடு புலம்பி
இருந்தமை, ''வண்ண நறுந் தாமரை மலரும், வாசக் குவளை நாள் மலரும்,
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின், தரும் பொய்காய்!
கண்ணும் முகமும் காட்டுவாய்; வடிவும் ஒரு கால் காட்டாயோ? (3732)
என்பதனாலும் அறியலாம்.

     உழல்வென் - வெளிப்படையாய் எங்கும் சுற்றித் திரிதலை உணர்த்தும்.
தாள் - மலையின் அடிவாரம்.  நாண் என்ற சொல்லை வேறொரு பொருளில்
மீண்டும் பயன்படுத்தியதால் ஈற்றடி சொல்பொருள் பின்வருநிலைஅணி.  21