3938. | நீடு நாகமூடு மேகம் ஓட, நீரும் ஓட, நேர் ஆடு நாகம் ஓட, மான் யானை ஓட, ஆளி போம் - மாடு நாகம் நீடு சாரல், வாளை ஓடும் வாவியூடு ஓடு நாகம் ஓட, வேங்கை ஓடும், யூகம் ஓடவே. |
நீடு நாகம் ஊடு மேகம் ஓட - நீண்ட மலைகளின் வழியே மேகங்கள் ஓடவும்; நீரும் ஓட - (மேகங்கள் பொழியும்) நீர் பெருகிப் பாயவும்; நேர் ஆடு நாகம் ஓட - (எதிரில்) படமெடுத்தாடும் பாம்புகள் அஞ்சி ஓடவும்; மான், யானை ஒட - மான்களோடு யானைகள் ஓடவும்; ஆளி போம் - அவற்றொடு சிங்கங்களும் செல்லும்; மாடு நாகம் நீடு சாரல் - பக்கங்களில் சுரபுன்னை மரங்கள் வளரப்பெற்ற மலைச் சாரல்களில்; வாவியூடு - சுனைகளிலே; வாளை ஓடும் - வாளை மீன்களோடும்; ஓடு நாகம் ஓட - ஓடும் இயல்புள்ள நீர்ப்பாம்புகளும் அஞ்சி ஓட; வேங்கை ஓடும் - வேங்கைப் புலிகளுடன்; யூகம் ஓடவே - கருங்குரங்குகளும் ஓடுவனவாயின. நாகம் என்பது பல பொருள் ஒரு சொல்; அச்சொல் 'நீடு நாகம்' என்கையில் மலையினையும், 'ஆடுநாகம்' என்கையில் பாம்பினையும், 'நாகம் நீடு சாரல்' என்கையில் சுரபுன்னை மரத்தையும்; 'ஓடு நாகம்' என்கையில் நீர்ப்பாம்பையும் குறித்தது. அம்மலைவழியில் வலியனவும் மெலியனவும் ஆகிய உயிர்கள் இராமலக்குவரின் விரைந்த செலவினால் அச்சமுற்று விலகின என்பதைப் பாடல் புலப்படுத்துகிறது. அச்சத்தால் தடுமாறி ஓடுகையில் தம்மில் பகையுடையனவும் ஒன்றாகச் சேர்ந்து ஓடுதல் இயல்பு. அதனால் புலியுடன் குரங்கும், மீன்களோடு நீர்ப் பாம்புகளும் ஓடுகின்றன. வாலியை அழிக்கச் செல்லும் இராமலக்குவரின் நடையில் சினம் இருப்பதையும் உணரமுடிகிறது. 'ஓட' என்னும் சொல் ஒரே பொருளில் பல இடங்களில் வருவதால் 'சொற்பொருள் பின் வருநிலை' அணியாகும். யூகம் என்று இப்பாடலில் குரங்குகள் குறிக்கப்பட்டன. சுக்கிரீவன் முதலியோர் வடிவப் பாங்கில் ஒருசால் குரங்குத் தோற்றத்தினரேனும் மானிடராகவே கொள்ளத் தக்கார். 3930 ஆம் பாடலில் அனுமன் தன் இனத்தவரை மானிடம்' என்று குறித்தது காண்க. 4 |