3942. | தேன் இழுக்கு சாரல் வாரி செல்ல, மீது செல்லும் நாள் - மீன் இழுக்கும்; அன்றி, வானவில் இழுக்கும்; வெண் மதிக் கூன் இழுக்கும்; மற்று உலாவு கோள் இழுக்கும்; என்பரால் - வான் இழுக்கும் ஏல் வாச மன்றல் நாறு குன்றமே. |
வான் இழுக்கும் - வானில் உள்ள தேவர்களையும் (நறுமணத்தால் விரும்பி வருமாறு) இழுக்கின்ற; ஏல வாச மன்றல் நாறு - ஏலக் காய்களின் நறுமணம் வீசப்பெற்ற; குன்றம் - அம்மலை (தன்பால்); தேன் இழுக்கு சாரல்- தேன் பெருக்கால் வழுக்கும் இயல்புடைய சாரல்களில்; வாரி செல்ல - நீர்வெள்ளம் பெருகியதனால்; மீது செல்லும் நாள்மீன் - வானத்தில்செல்கின்ற விண்மீன்களை; இழுக்கும் - (கீழே) இழுக்கும்; அன்றி வானவில்இழுக்கும் - அல்லாமல், வானில் காணப்படும் இந்திரவில்லையும் இழுக்கும்; வெண்மதிக் கூன் இழுக்கும் - வெண்ணிறப் பிறைத் திங்களையும் இழுக்கும்; மற்று உலாவு கோள் இழுக்கும் - மேலும் வானத்தில் இயங்குகின்ற கிரகங்களையும் இழுக்கும்; என்பர் - என்று கூறுவர். அம்மலைகளில் வளரும் ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் வானில் உள்ள தேவர்களையும் அங்கு இறங்கி வரச்செய்யும். மலைச்சாரல்களில் பெருகி ஓடும் தேன் வெள்ளத்தால், வானிலுள்ள விண்மீன்களும், வானவில்லும், பிறைமதியும், மற்று முள்ள கிரகங்களும் இழுக்கப்பெறும் என்று சிறப்பிக்கப்படுகிறது. அம்மலைகளின் உயர்வும், அவற்றில் பெருகுகின்ற நீர்ப் பெருக்கின் மிகுதியையும் கூறுவதால் இது தொடர்வு உயர்வு நவிற்சி அணியாம். 'இழுக்கும்' எனப் பலமுறை ஒரே பொருளில் வருதலால் சொற்பொருள் பின் வருநிலை அணியும் அமைந்தது. வான் - இடவாகுபெயர், நாள் மீன் - நட்சத்திரம்; பிறை வளைவுடையதாதலின் 'வெண்மதிக்கூன்' என்றார். வாச மன்றல் - ஒரு பொருட்பன்மொழி. 8 |