வாலியின் இருப்பிடம் சார்ந்து, ஆலோசித்தல் 3943. | அன்னது ஆய குன்றின் ஆறு, சென்ற வீரர், ஐந்தொடு ஐந்து உன்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி, இம்பரில் பொன்னின் நாடு இழிந்தது அன்ன, வாலி வாழ் பொருப்பு இடம் துன்னினார்கள்; 'செய்வது என்னை?' என்று நின்று சொல்லுவார்: |
அன்னது ஆய - அத்தன்மையத்தான; குன்றின் ஆறு - மலை வழி யிலே; சென்ற வீரர் - சென்ற இராமன் முதலிய வீரர்கள்; ஐந்தொடு ஐந்து உன்னல் ஆய - ஐந்தும் ஐந்தும் பத்து என்று எண்ணுதற்குரிய; யோசனைக்கும் உம்பர் ஏறி - யோசனை தூரத்திற்கும் மேலாக மலை மீது ஏறிச் சென்று; இம்பரில் - இவ்வுலகில்; பொன்னின் நாடு இழிந்தது அன்ன- பொன்மயமான தேவர் உலகம் இறங்கி வந்தாற்போன்ற; வாலி வாழ்பொருப்பு இடம் - வாலி வாழ்கின்ற (கிட்கிந்தை) மலையின் இடத்தை; துன்னினார்கள் - அடைந்தவர்களாய்; செய்வது என்னை - இனிச் செய்ய வேண்டுவது என்ன? என்று நின்று சொல்லுவார் - என்று நின்று (தமக்குள்) பேசிக் கொள்வாராயினர். வாலியின் ஆட்சியிலுள்ள கிட்கிந்தை பல வளங்களைப் பெற்றதாயும். காட்சிக்கினியதாயும் விளங்கியதால் தேவர் உலகமே இவ்வுலகில் வந்து இறங்கியதனை ஒத்து விளங்கியது என்றார். ருசியமுக மலையினின்று கிட்கிந்தைக்கு நீண்ட தூரம் மலைவழி நடந்தனர் என்பதை 'ஐந்தொடு ஐந்து உன்னலாய யோசனைக்கும் உம்பர் ஏறி'என்றார். 9 |