3948.உருத்தனன் பொர எதிர்ந்து
      இளவல் உற்றமை,
வரைத் தடந் தோளினான்,
      மனத்தின் எண்ணினான்;
சிரித்தனன்; அவ் ஒலி,
      திசையின் அப் புறத்து
இரித்தது, அவ் உலகம்
      ஓர் ஏழொடு ஏழையும்.

     வரைத் தடந் தோளினான் - மலையினை ஒத்த பெரிய தோள்களை
உடைய வாலி; இளவல் - தன்தம்பியாகிய சுக்கிரீவன்; உருத்தனன் - சினம்
கொண்டவனாய்; பொர எதிர்ந்து உற்றமை - தன்னுடன் போர்செய்ய
எதிர்த்து வந்ததை; மனத்தில் எண்ணினான் - தன் மனத்தில்
நினைந்தவனாய்; சிரித்தனன் - சிரித்தான்; அவ்வொலி - அச்சிரிப்பொலி;
அவ்வுலகம் ஓர் ஏழொடு ஏழையும் -
அந்தப் பதினான்கு உலகங்களையும்
கடந்து; திசையின் அப்புறத்து - திசைகளின் எல்லைக்கு அப்பால்; இரித்தது
-
அஞ்சி ஓடும்படி செய்தது.

     போரில் பல முறை தன்னிடம் தோற்ற சுக்கிரீவன் வலியப்போருக்கு
அழைத்ததை எண்ணி இகழ்ச்சியால் வாலி சிரித்தான். எள்ளல் பற்றி வந்த
நகை.  அவன் சிரிப்பொலி பதினான்கு உலகங்களையும் நிலை கலங்கி ஓடச்
செய்தது என்பது உயர்வுநவிற்சி அணி.  உலகம் - இடவாகுபெயரால் அங்கு
வாழ்பவரைக் குறிக்கும்.  இரித்தது - பிறவினை.                       14