3950. | போய்ப் பொடித்தன மயிர்ப் புறத்த, வெம் பொறி; காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட, தீப் பொடித்தன, விழி; தேவர் நாட்டினும் மீப் பொடித்தன புகை, உயிர்ப்பு வீங்கவே. |
வெம்பொறி - (வாலியின் சினத்தால்) கொடிய தீப்பொறிகள்; மயிர்ப்புறத்த போய்ப் பொடித்தன - மயிர்க்கால் தொறும் தோன்றிப் பக்கங்களில் சென்று சிதறின; விழி - (வாலியின்) கண்கள்; காய்ப்பொடு உற்று எழு - கோபத்தோடு பொருந்தி மேல் நோக்கி எழுகின்ற; வடகனலும் கண்கெட - வடவைத் தீயும் காணின் கண் ஒளி கெடும்படி; தீப் பொடித்தன- தீயைச் சிந்தின; உயிர்ப்பு வீங்க - (அவனுடைய) மூச்சுக்காற்றுப் பெரிதாய்எழ; புகை - அதிலிருந்து எழுந்த புகைகள்; தேவர் நாட்டினும் மீப்பொடித்தன - தேவர்கள் வாழும் வானுலகினும் மேலோங்கிப் பரவின. மயிர்க்கால்தொறும் தீப்பொறிகள் தோன்றிச் சிதறின என்றும், வடவைத் தீயின் கண் பார்வையும் கெடுமாறு வாலியின் விழிகள் சினம் கக்கின என்றும், மூச்சுக் காற்றில் எழுந்த புகைக் கூட்டம் விண்ணுலகையும் தாண்டிச் சென்றது என்றும் கூறி, வாலியின் சினமிகுதியைக் கவிஞர் புலப்படுத்திய திறம் நயம் மிக்கது. வட கனல் - வடவைக் கனல். கடலில் பெண்குதிரை முக வடிவில் உள்ள கொடிய தீப் பிழம்பு. ''வடவை தீதர'' (201). 'மா வடவைக் கனல் ஆனதால்' (1404), சுடர்க் குதிரையின் வாய் முகத்திடை நிமிர்ந்து வடவேலை பருகும். (2541) என்னும் அடிகளில் வடவைத் தீபற்றிய குறிப்புக் காணலாம். 16 |