தாரை விலக்கலும், வாலி மறுத்துக் கூறலும்

3956.ஆயிடை,தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடைத் தோளினாள், இடை விலக்கினாள்;
வாயிடைப் புகை வர, வாலி கண் வரும்
தீயிடை, தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்.

     ஆயிடை - அப்பொழுது; தாரை என்று - தாரை என்று பெயர்
கூறப்பட்டு; அமிழ்தின் தோன்றிய - அமுதம் போலக் காணப்படுகின்ற;
வேயிடைத் தோளினாள் -
மூங்கிலின் தன்மையைத் தன்னிடத்தே கொண்ட
தோள்களை உடையவள்; வாயிடைப் புகைவர- வாயினின்று சினத்தால் புகை
வருமாறு; வாலி - வாலியின்; கண் வரும் தீயிடை - கண்களிலிருந்து வரும்
சினத்தீயிடையே; தன் நெடுங் கூந்தல் தீகின்றாள் - தன் நீண்ட கூந்தல்
எரியப் பெற்றவளாய்; இடை விலக்கினாள் - இடை நின்று (அவனைத்
தடுத்து) விலக்கினாள்.

     அ+இடை = ஆயிடை என அகரச்சுட்டு நீண்டது.  ஐம்பொறிகட்கும்
இனியளாதல் பற்றி அமுதம் போலத் தோன்றியவள் என்றார்.  அமிழ்தின்
தோன்றிய வேயிடைத் தோளினாள்.  முன் பாடலில் 'கடலில் தான் கடை
ஆலமும் ஒத்தான்' என்றமையால், அதனை இங்குக் கொண்டு கூட்டினால்,
ஆலத்திற்குப் பிறகு கிடைத்த அமுதம் போன்றவள் வாலியின் மனைவி என்ற
பொருள் நயம் கொள்ள முடிகிறது.  வாலிக்கு ஆலமும் தாரைக்கு அமுதமும்
உவமையாவது நயம்.  வாயிடைப் புகைவர - கண்களில் தோன்றிய
சினத்தீயால் உண்டாய புகை வாயிடமாக வெளிவந்தது என்க.  முன் வாலிக்கு
இடம் துடித்ததோடு (3946) இப்பொழுது தாரை இடை விலக்கலும் அவன்
கேட்டிற்கு அறிகுறியாயின.  'கூந்தல் தீகின்றாள்' என்னும் தொடரால்
தாரைக்குப் பின்னர் வர இருக்கும் அமங்கல நிலை முன்னரே சுட்டப்படுகிறது
எனலாம்.  இள மூங்கில் மகளிர் தோளுக்கு உவமையாம்.               22