3959.'மூன்று என முற்றிய முடிவு
      இல் பேர் உலகு
ஏன்று, உடன் உற்றன,
      எனக்கு நேர் எனத்
தோன்றினும், தோற்று, அவை
      தொலையும் என்றலின்
சான்று உள; அன்னவை -
     தையல்! - கேட்டியால்:

     தையல் - (அதற்கு வாலி) பெண்ணே! மூன்று என முற்றிய - மேல்,
கீழ், நடு என மூன்றாக வகுக்கப்பெற்றுள்ள; முடிவு இல் பேர் உலகு -
எல்லையற்ற பெரிய உலகங்கள் யாவும்; ஏன்று உடன் உற்றன - தம்முள்
இயைந்து ஒன்று சேர்ந்தனவாய்; எனக்கு நேர் என - எனக்குப் பகையாக;
தோன்றினும் -
எதிர்த்து வந்து தோன்றினாலும்; அவை
தோற்றுத்தொலையும் -
அவையெல்லாம்தோற்று அழியும்; என்றலின் -
என்று கூறுவதற்கு; சான்று உள - சான்றுகள் பல உள்ளன; அன்னவை -
அவற்றை; கேட்டி - கேட்பாயாக!

     தையல் - அழகுடையவள்; அண்மை விளி, உலகு - இடவாகுபெயரால்
அங்குள்ள உயிர்களைக் குறித்தது.  கேட்டி - முன்னிலை ஒருமை; ஆல்
அசை வாலியின் போர்ச்செயலைக் கண்டு அறியும் வாய்ப்பில்லாதவளாய்
கேள்வி மாத்திரத்தால் அறிந்தவளாதலின் 'கேட்டி' என வாலி
உரைக்கலாயினன்.                                             25