3961. | 'பெயர்வுற வலிக்கவும், மிடுக்கு இல் பெற்றியார் அயர்வுறல் உற்றதை நோக்கி, யான், அது தயிர் எனக் கடைந்து, அவர்க்கு அமுதம் தந்தது, மயில் இயல் குயில்மொழி! மறக்கல் ஆவதோ? |
மயில் இயல் குயில் மொழி - மயில் போன்ற சாயலையும் குயிலின் குரலை ஒத்த இனிய சொல்லையும் உடைய தாரையே! பெயர்வுற வலிக்கவும்- (மந்தர மலையாகிய மத்து) நிலைபெயர்ந்து சுழலுமாறு வலிந்து இழுக்கவும்; மிடுக்குஇல் பெற்றியார் - வலிமை இல்லாத தன் மையரான தேவ அசுரர்கள்; அயர்வுறல் உற்றதை நோக்கி - தளர்ச்சி அடைந்ததைப் பார்த்து; யான் - நான்; அது தயிர் எனக் கடைந்து - அதனைத் தயிர் கடைவது போல் கடைந்து; அவர்க்கு அமுதம் தந்தது - அவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்த செயல்; மறக்கல் ஆவதோ - மறக்கக்கூடியது ஆகுமோ? (ஆகாது). மயில் இயல், குயில்மொழி - உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. அண்மைவிளி, மறக்கல் ஆவதோ? - வாலி கடல் கடைந்து அமுதளித்த பெருஞ்செயலைத் தாரை அறிந்ததே; எனவே, 'நீ மறக்கக்கூடியதா' எனத் தாரைக்கு உரைத்தனன். இச்செயலை உலகத்தார் மறக்கக்கூடியதா? என்று உலகினர் மறக்கமுடியாத அருஞ்செயலைச் செய்வதன் வாலி என்பதை நிறுவினன் எனவும் கொள்ளலாம் - ஆவதோ - ஓகாரம் எதிர்மறை. 27 |