3963. | 'பேதையர் எதிர்குவர் எனினும், பெற்றுடை ஊதிய வரங்களும், உரமும், உள்ளதில் பாதியும், என்னதால்; பகைப்பது எங்ஙனம்? நீ, துயர் ஒழிக!' என, நின்று கூறினான். |
பேதையர் - (எனது வலிமையை உணராத) அறிவில்லாதவர்; எதிர்குவர் எனினும் - என்னை எதிர்த்துப் போர் புரிவார்கள் என்றாலும்; பெற்றுடை - அவர்கள் அடைந்துள்ள; ஊதிய வரங்களும் - சிறந்த வரங்களிலும்; உரமும் - வலிமையிலும்; உள்ளதில் பாதியும் - அவர்களிடம் உள்ளதில் சரிபாதி; என்னதால் - என்னுடையதாய் விடும். அதனால்; பகைப்பது எங்ஙனம் - அவர்கள் பகைமைகொண்டு என்னிடம் போரிடுவது எவ்வாறு? நீ துயர் ஒழிக - (நான் போர்க்குச் செல்வது குறித்து) 'நீ துன்பம் அடைதலை நீக்குக'; என நின்று கூறினான்- என்று நிதானித்துத் தாரைக்கு ஆறுதல் மொழி கூறினான். தனக்கு இயல்பாக அமைந்துள்ள வலிமையோடு தன்னை எதிர்ப்போரின் வன்மையில் பாதியும் தனக்கு வந்து சேர்ந்துவிடுவதால் தன்னை எதிர்க்கக்கூடியவர் எவரும் இல்லையென்று கூறித் 'துயர்அடைய வேண்டாம்' எனத் தாரைக்கு வாலி ஆறுதல் கூறினான். பகைவர் வலிமையில் பாதி பெறும் வரம் சிவபிரான் வாலிக்கு அளித்தது; 'அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டு, உடை வரம் அறியேன்' (6177) என்றது காண்க. இராவணன் இங்ஙனம் பாதி வலிமை இழந்ததால் தோற்றதையும் 'என் வலி அவன் வயின் எய்த வரங்கொள் வாலிபால் தோற்றனென்' (6177) என்ற அடிகள் உணர்த்தும். எதிர்குவர் - கு, சாரியை; ஒழிகென (ஒழிக என) - தொகுத்தல்விகாரம். 29 |