3964. அன்னது கேட்டவள்,
      'அரச!' ''ஆயவற்கு
இன் உயிர் நட்பு
     அமைந்து இராமன் என்பவன்,
உன் உயிர் கோடலுக்கு
      உடன் வந்தான்'' எனத்
துன்னிய அன்பினர்
      சொல்லினார்' என்றாள்.

     அன்னது கேட்டவள் - அவ்வாறு வாலி சொல்லக் கேட்ட தாரை;
அரச -
(வாலியை நோக்கி) 'அரசே'; இராமன் என்பவன் - இராமன்,
என்போன்; ஆயவற்கு - அந்தச் சுக்கிரீவனுக்கு; இன் உயிர் நட்பு
அமைந்து-
இனிய உயிர்த் துணைவனாகி; உன் உயிர் கோடலுக்கு - உனது
உயிரைக் கொள்வதற்கு; உடன் வந்தான் என -அவனுடன் வந்துள்ளான்
என்று; துன்னிய அன்பினர் - நம்மிடம் நெருங்கிய அன்புடையவர்கள்;
சொல்லினார் என்றாள் -
சொன்னார்கள் என்று சொன்னாள்.

     துன்னிய அன்பினர் சொல்லினார் - நமக்கு நன்மை புரியும் உண்மை
அன்புடையார் சிலர் சொல்லக் கேள்வியுற்றேன் என்று உரைத்தனள் தாரை.
இக்கூற்றால் தாரை அரசியல் அறிவு கொண்டவளாய் ஆங்காங்கு நடைபெறும்
நிகழ்ச்சிகளை அறிந்து வந்தனள் என்பது புலனாகிறது.  தன்னை எதிர்ப்பவர்
எவர் எனப் புறப்படும் வாலியிடம், மாற்றான் வலிமை குறைந்தவனாயினும்,
அவனுக்குத் துணையாகவரும் துணைவனது வலிமையை எண்ணித்
துணிந்தபின் போருக்குச் செல்லுதல் நன்று எனக்கூறும் தாரையின்
அரசியலறியும் ஈண்டு நினைக்கத்தக்கது. 'சொல்லினார்' என்பதால் செய்தியைத்
தீர விசாரித்துப் பின்னர்ச் செயற்பட வேண்டும் என அறிவுத்திறமும்
புலனாகின்றது.                                                  30