3968. | 'நின்று பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும், வென்றி வெஞ் சிலை அலால், பிறிது வேண்டுமோ? தன் துணை ஒருவரும், தன்னில் வேறு இலான், புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ? |
நின்ற பேர் உலகு எலாம் - நிலைபெற்றுள்ள பெரிய உலகங்கள் யாவும்; நெருக்கி நேரினும் - ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும்; வென்றி வெஞ்சிலை அலால்- வெற்றியைத் தரும் அவனது கொடிய கோதண்டமே அல்லாமல்; பிறிது வேண்டுமோ- வேறொன்றைத் தனக்குத் துணையாக வேண்டுவதுண்டோ? (இல்லை); தன் துணை தன்னில் - தனக்கு நிகர் தானே அல்லாமல்; வேறு ஒருவரும் இலான் - வேறொருவரும் இல்லாத இராமன்; புன்தொழில் குரங்கொடு- அற்பச் செயலை உடைய ஒரு குரங்கினோடு; புணரும் நட்பனோ - சேரும் நட்பினை உடையவன் ஆவானோ? தனக்கு நிகர் தானே ஆதலின் 'தன்துணை ஒருவரும் தன்னில் வேறிலான்' என்றான். 'தனக்கு உவமை இல்லாதான்' என்றார் வள்ளுவர். (குறள். 7) திருவிண்ணகர் கோயில் திருமாலுக்கு ஒப்பிலியப்பன் என்பது பெயராகும். 'தன் பெருங் குணத்தால் தன்னைத்தான் அலது ஒப்பு இலான்' (3759) என்று கம்பர் அனுமனையும் குறிப்பார். 'கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ' (4023) என வாலியே இராமனை விளித்துப் பேசுவதும் காண்க. இராமன் இழிதொழிலுக்கு மாறானவன் என்பதை உணர்த்த 'புன்தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ?' எனக் குறித்தான். ஓகாரம் இரண்டும் எதிர்மறை. 34 |