3969. | 'தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன், எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில் அம்பு இடை தொடுக்குமோ, அருளின் ஆழியான்? |
தம்பியர் அல்லது- தன் தம்பிமார்களே அல்லாமல்; தனக்கு வேறு உயிர் - தனக்குத் தனியாக வேறோர் உயிர்; இம்பரின் இலது என - இவ்வுலகில் இல்லை என்று; எண்ணி - கருதி; ஏய்ந்தவன் - அவர்களோடு ஒன்றி நடப்பவனும்; அருளின் ஆழியான் - கருணைக் கடலுமான இராமன்; எம்பியும் யானும் உற்று - என் தம்பி சுக்கிரீவனும் யானுமாகப் பொருந்தி; எதிர்ந்த போரினில் - எதிர்த்து நடத்தும் போரில்; இடை அம்பு தொடுக்குமோ- இடையே புகுந்து என் மேல் அம்பினைத் தொடுப்பானோ? (தொடுக்கமாட்டான்). தம்பியரைத் தன் உயிரெனக் கருதும் இராமன், உடன் பிறந்தார்க்கிடை ஏற்பட்ட போரில், பகைமையை நீக்கி ஒன்றுபடுத்த முயல்வானேயன்றி ஒரு பக்கம் சார்ந்து தனக்கெதிரே அம்பினைத் தொடுக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் வாலி 'எம்பியும் யானும் உற்றெதிர்ந்த போரினில் அம்பு இடை தொடுக்குமோ' என்றான். 'தள்ளா வினையேன் தனி ஆர் உயிராய் உள்ளாய்' (3608) என்ற அடிகள் இராமன் தம்பியரை உயிரெனப் போற்றி ஒன்றி வாழ்ந்ததை உணர்த்துவன. அருளின் ஆழி - கருணைக்கடல். இராமனைக் 'கருணைக்கடல்' (1257) எனக் கம்பர் முன்னரும் குறிப்பிட்டுள்ளார். 35 |