3972. | நின்றான், எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச, தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி, குன்றூடு வந்து உற்றனன் - கோள் அவுணன் குறித்த வன் தூணிடைத் தோன்றிய மா நரசிங்கம் என்ன. |
தன் தோள் வலியால் - தனது தோள்களின் வலிமையால்; தகைமால் வரை சாலும் - சிறப்பு மிக்க பெரிய மலையை ஒத்து விளங்கும்; வாலி - வாலியானவன்; கோள் அவுணன் குறித்த- கொடிய அசுரனான இரணியன் சுட்டிக்காட்டிய; வன் தூணிடைத் தோன்றிய - வலிமை மிக்க தூணிடத்தே வெளிப்பட்டுத் தோன்றிய; மாநரசிங்கம் என்ன - பெருமைமிக்க நரசிங்க மூர்த்தி போல; எதிர் யாவரும் - தன்னைக் காண்கின்ற எல்லோரும்; நெஞ்சு நடுங்கி அஞ்ச - மனம் நடுங்கி அச்சம் கொள்ள; குன்றூடுவந்து - அம்மலையின் இடையே; உற்றனன் நின்றான் - வந்து சேர்ந்து நின்றான். வாலியின் தோள்களுக்கு மால்வரை உவமை. போருக்குக் கூவியழைத்த சுக்கிரீவன் எதிரே யாவரும் அஞ்சும் வகையில் தோன்றிய வாலிக்கு இரணியன் சுட்டிக்காட்டிய தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிங்கம் உவமை. 38 |