3973. | ஆர்க்கின்ற பின்னோன்தனை நோக்கினன்; தானும் ஆர்த்தான்; வேர்க்கின்ற வானத்து உரும்ஏறு வெறித்து வீழப் போர்க்கின்றது, எல்லா உலகும் பொதிர்வுற்ற பூசல் - கார்க் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன. |
ஆர்க்கின்ற பின்னோன்தனை- போர் முழக்கம் செய்கின்ற தம்பியான சுக்கிரீவனை; நோக்கினன் - (வாலி) பார்த்தான்; தானும் ஆர்த்தான் - (வாலி) தானும் போர் முழக்கம் செய்தான்; வேர்க்கின்ற வானத்து - (அதனால்) அச்சத்தால் வேர்க்கின்ற வானத்திலுள்ள; உரும் ஏறு வெறித்து வீழ - பேரிடிகள் வேகமாய் விழ; பொதிர்வுற்ற பூசல் - பக்கங்களில் பரவிய அப்பேரொலியானது; கார்க்குன்றம் அன்னான் - கரிய மலையையொத்த திருமால்; நிலம்தாவிய கால் இது என்ன - திரிவிக்கிரமனாய் நிலத்தை தாவி அளந்த திருவடி இது என்று சொல்லும்படி; எல்லா உலகும் போர்க்கின்றது- எல்லா உலகங்களும் தனக்குள் அடங்குமாறு சூழ்ந்து போர்த்துக்கொண்டது. வேர்க்கின்ற வானம் - மழை துளித்தல், வேர்த்தல் அச்சம் பற்றிய மெய்ப்பாடு. கரிய நிறமும் நெடிய வடிவும் உடைமைபற்றித் திருமாலைக் 'கார்க் குன்றன் அன்னான்' என்றார். 'மாயோன்அன்ன மால்வரை' (நற்றிணை - 32) என்றார் கபிலர். நிலந்தாவிய கால் - மாவலிபால் வாமனனாகி வந்து மூன்றடி மண் இரந்து வேண்டிய திருமால் தனக்கு வேண்டிய நிலத்தை அளத்தற்பொருட்டு உயர்த்திய திருவடி. திருமால் நிலம் அளக்கத் தாவிய சேவடி எல்லாவுலகங்களிலும் பரவிச் சென்று அவற்றின் மேம்பட்டு விளங்கினாற்போல, வாலியின் போர்ப்பூசலும் எல்லா உலகங்களிலும் பரவிச் சென்று மிகைப்பட்டு ஒலித்தது என்றவாறு. திருமால் உலகளந்த செய்தி பாலகாண்டம் வேள்விப்படத்தும் கூறப்பட்டுள்ளது. முன் பாடலில் நரசிங்க அவதாரத்தையும், இப்பாடலில் திரிவிக்கிரம அவதாரத்தையும் ஒப்பிட்ட சிறப்பு நோக்கற்பாலது. உருமேறு விழுதல், ஒலி மிகுதியால் ஏற்பட்ட அதிர்ச்சியாலாகும். 39 |