3981. | தோளோடு தோள் தேய்த்தலின், தொல் நிலம் தாங்கல் ஆற்றாத் தாளோடு தாள் தேய்த்தலின், தந்த தழல் பிறங்கல், வாளோடு மின் ஓடுவபோல், நெடு வானின் ஓடும் - கோளோடு கோள் உற்றென ஒத்து அடர்ந்தார், கொதித்தார். |
தோளோடு தோள் தேய்த்தலின் - (அவ்விருவரும்) ஒருவர் தோளோடு மற்றொருவர் தோள் தாக்கி உராய்வதாலும்; தொல்நிலம் தாங்கல் ஆற்றா - பழைமையான நிலவுலகம் தாங்க முடியாதவாறு; தாளோடு தாள் தேய்த்தலின் - ஒருவர் காலோடு மற்றொருவர் காலைத் தேய்த்தலினாலும்; தந்த தழல் பிறங்கல் - உண்டான தீப்பிழம்புகள்; வாளொடு மின் ஒடுவபோல் - ஒளியோடு மின்னல்கள்ஓடுவன போலும்; நெடுவானின் ஓடும்- பரந்த வானத்தில் விரைந்து செல்லும்; கோளொடு கோள் உற்றென ஒத்து- (அவ்விருவரும்) கோள்கள் இரண்டு ஒன்றையொன்று தாக்கிக்கொண்டாற்போல; அடர்ந்தார், கொதித்தார் - நெருங்கிப் போரிட்டுக்(உள்ளம்) கொதிப்புற்றார்கள். அவ்வாலி, சுக்கிரீவர் தம்தோளொடு தோள் தாக்குறுவதாலும், தாளொடு தாள் தேய்ப்புறுவதாலும் உண்டான நெருப்புப் பிழம்பு வானில் மின்னல் ஓடுவ போல் ஓடின. அவர்கள் இரு கோள்கள் தாக்கிக் கொள்வன போலத் தாக்கிக் கொண்டனர் எனப் போரின் உக்கிரம் கூறப்பட்டது. கோள் - கிரகம். வானத்தில் வெள்ளி, வியாழன் முதலிய கோள்கள் ஒன்றோடொன்று மோதுதல் கோள் போர் எனவும், கிரகயுத்தம் எனவும் கூறப்படும். 'ஏலா வெண்பொன் போருறு காலை' என்பது புறநானூறு (புறம். 389). ''ஆதிசான்ற மேதகு வேட்கையின், நாளும் கோளும் மயங்கிய ஞாட்பின், மதியமும் ஞாயிறும் பொருவன போல'' (தொல் - புறத் - 17 பாரதப்பாட்டு மேற்கோள்) என வரும் நச்சினார்க்கினியர் உரை மேற்கோளில் கோள்களின் போர் குறிக்கப் பெற்றுள்ளது. நிலம் தாங்கல் ஆற்றாமை - வாலி சுக்கிரீவர் தாள்கொண்டு தாளைத் தேய்க்கும் வலி பொறுக்க முடியாமை. பரவும் தீப்பழம்பிற்கு ஓடும் மின்னலும், போரிடும் வாலி சுக்கிரீவர்க்குக் கோள்கள் இரண்டும் உவமையாயின. 47 |