3982. தம் தோள் வலி மிக்கவர்,
      தாம் ஒரு தாய் வயிற்றின்
வந்தோர், மட மங்கை
      பொருட்டு மலைக்கலுற்றார்;
சிந்து ஓடு அரி ஒண்
      கண் திலோத்தமை காதல் செற்ற
சுந்தோபசுந்தப் பெயர்த்
      தொல்லையினோரும் ஒத்தார்.

     தம்தோள் வலி மிக்கவர் - தமது தோள் வலிமையால் மேம்பட்ட
வர்களும்; தாம் ஒரு தாய் வயிற்றின் வந்தோர் - தாம் ஒரு தாய்
வயிற்றிலிருந்து பிறந்தவர்களும்; மடமங்கை பொருட்டு - இளம் பெண்ணின்
நிமித்தமாக; மலைக்கல் உற்றார் - போர் செய்யத் தொடங்கிய
வர்களுமான அவ்வாலி, சுக்கிரீவர்; சிந்து ஓடு அரிஒண்கண் - சிதறிப் பரந்த
செவ்வரி உடைய ஒளிமிக்க கண்களையுடைய; திலோத்தமை காதல் -
திலோத்தமை மீதுகொண்ட காதலால்; செற்ற - பகைத்துப் போர் செய்த; சுந்த
உபசுந்தப் பெயர் -
சுந்தன், உபசுந்தன் என்னும் பெயர்களை உடைய;
தொல்லையினாரும் -
பழைய அசுரர்கள் இருவரையும்; ஒத்தார் - ஒத்தனர்.

     சுக்கிரீவன் மனைவி உருமை, வாலியால் வலிதில் கொள்ளப்பட்டமை
காரணமாகவும் போர் நடைபெறுவதால் 'மடமங்கை பொருட்டு' என்றார்.
'உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம், அருமருந்ததையும் அவன்
விரும்பினான்' (3852); 'ஒருவன் தன் இளையோன் தாரம் வௌவினன்'' என்ற
சொல் தரிக்குமாறு உளதோ? (3854) 'அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியை,
பெருமை நீங்கினை (4043) என்ற அடிகளைக் காண்க.  இச் செய்யுளில் முதல்
இரண்டு அடிகளும் வாலி, சுக்கிரீவர்களுக்கும், சுந்தோப சுந்தர்க்கும்
பொருந்தும் வகையில் சிலேடைப் பொருளில் அமைந்திருப்பது நோக்கற்பாலது.
ஸு ந்த + உபஸு ந்த = ஸு ந்தோப ஸு ந்தர் என்றாயது வடமொழிப் புணர்ச்சி;
                                                          48